அடுக்குமாடி குடியிருப்பில் மிரட்டும் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததாக அதிர்ச்சி..! பொது பயன்பாட்டு கட்டணம் உயர்வு

0 6810

தமிழகத்தில் மின்கட்டண சீரமைப்பை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுகான (common service) மின்கட்டணம் நான்கு மடங்கு வரை உயர்ந்த நிலையில் , கோடை காலம் தொடங்கியதால்  மின்கட்டணம் மேலும் உயரும் நிலை உருவாகியுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் , பொதுப்பயன்பாட்டு மின் கட்டணம் , வணிக இணைப்புக் கட்டணமாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அபார்ட்மன்ட்களில் பயன்படுத்தப்படும் மோட்டார், லிப்ட் , மாடிப்படிகள் மற்றும் போர்டிகோவில் உள்ள மின்விளக்குகளுக்கான 100யூனிட் இலவச மின்சாரம் ரத்தானதுடன், ஒரு யூனிட் மின்சாரத்திற்கான பயன்பாட்டு கட்டணம் 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து , தற்போது 8 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அடுக்குமாடிகளில் குடியிருப்போர் வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மின்கட்டணத்தை வரையறை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் .

நான்கு வீடுகள் இருக்கும் அபார்ட்மென்ட்களுக்கும் , நூற்றுக்கணக்கான வீடுகள் இருக்கும் அபார்ட்மென்ட்களுக்கும் ஒரே விதமாக பொதுபயன்பாட்டு மின் கட்டணத்தை வசூலிப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும் ? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்

புதியவிதி காரணமாக, 20 வீடுகளுக்கும் குறைவாக உள்ள சிறிய அபார்ட்மென்ட்களில் வசிப்பவர்களே பொதுப்பயன்பாட்டுக்காக அதிக மின்கட்டணத்தை செலுத்தும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறிப்பாக 6 வீடுகள் வரை இருக்கும் அபார்ட்மென்ட்களில் பொதுப்பயன்பாட்டு முறையில் முன்னர் 400 ரூபாய் செலுத்தியவர்கள் தற்போது 2500 ரூபாய்வரை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

லிப்ட்களின் பயன்பாட்டிற்கே , அதிக மின்சாரம் தேவைப்படும் என்பதால் தரைத்தளங்களில் இருப்போர் மாடிகளில் இருப்பவர்களிடம் லிப்ட்களை பயன்படுத்த கூடாது என வற்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில அபார்ட்மென்ட்களில் common service முறையில் இருக்கும் மின் இணைப்பை தனித்தனியாக பிரித்து லிப்ட்களின் மின் இணைப்பு , மாடிப்படி மின்விளக்கு , போர்டிகோ பகுதி மின்கட்டணம், தண்ணீர் மோட்டார் மின் கட்டணம் ஆகியவற்றை வீட்டுப் பயன்பாட்டு மின் இணைப்புடன் சேர்க்கலாமா என யோசித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மின்வாரிய அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்டபோது, அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப்பயன்பாட்டில் இருக்கும் மின் இணைப்பை தனியாக வீட்டுப் பயன்பாட்டு மின் இணைப்பாக மாற்றுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் , அவ்வாறு மாற்றக்கூடியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்

பயன்படுத்தும் யூனிட்களுக்கு ஏற்ப பல்வேறு விகிதங்களில் ( 0- 100 , 100-200 , 200-400 , 400-500 ) மின் கட்டணம் வசூலிக்கப்படுவதுபோல் , அபார்ட்மென்ட்டில் உள்ள வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணத் தளர்வுகளை மின்வாரியம் வழங்க வேண்டும் என்பதே குடியிருப்பவாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments