கடந்த 40 நாட்களாக 250 நெல் மூட்டைகளை தடுத்து வைத்துள்ள ரவுடிகள்... விவசாயி பரபரப்பு புகாரால் வாக்குவாதம்.!
செங்கல்பட்டு அடுத்த படாளம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் கேட்டு மிரட்டும் ரவுடிகள், தனக்கு சொந்தமான 250 மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய விடாமல் தடுத்து வைத்திருப்பதாக விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் புகார் தெரிவித்தார். எப்படி புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் முன்னிலையில் நெல் கொள்முதல் நிலைய புரோக்கர்கள் விவசாயிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மேன்வல்ராஜ், வேளாண்மை இணை இயக்குநர் அசோக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
அப்போது பேசிய பழையனூரை சேர்ந்த விவசாயி மணி என்பவர், தனது நிலத்தில் விளைந்த 250 நெல் மூட்டைகளை விற்பனைக்காக படாளத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் வைத்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 40நாட்களுக்கு மேல் ஆகியும் இன்றுவரை தனது நெல்மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் தடுத்து வைத்திருப்பதாகவும் , கையூட்டு பணம் கொடுப்பவர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்த கொள்முதல் நிலையம் அரசியல் ரவுடிகளின் கீழ் இயங்கி வருகிறது என்ற மணி, தட்டிக்கேட்ட தன்னை ரவுடிகள் சரமாரியாக தாக்கியதாகவும் புகார் தெரிவித்தார்
அப்போது பின்னால் இருந்து எழுந்த இருவர், அவர்கள் ஒன்றும் ரவுடிகள் அல்ல, உள்ளாட்சி நிர்வாகிகள் என்று கூறி விவசாயியை மிரட்டியதால், மற்ற விவசாயிகள் அவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அந்த இருவரும் படாளம் நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளுக்கு பணம் வாங்கிக் கொடுக்கும் புரோக்கர்கள் என்று கூறி விவசாய சங்க பிரதி நிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ் நிலை ஏற்பட்டது.
இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சம்மந்தப்பட்ட நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் விவசாயிகள் அமைதியடைந்தனர்.
மாவட்ட கூட்ட அரங்கிலேயே புகார் தெரிவித்த விவசாயி மிரட்டப்பட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments