BMW சொகுசு காரில் வலம்.. திருட்டு காரில் கஞ்சா கடத்தல்,165 வழக்கு - ஜாமீன் எடுக்க மனைவி..! ‘பந்தா’ பரமேஸ்வரன் அதிரடி கைது..!

0 1809

கட்சிக் கொடி பறக்கும் சொகுசு கார்... திருட்டு கார்களில் கஞ்சா கடத்தல்... வழக்குகளில் மாட்டிக்கொண்டால் ஜாமீன் எடுக்க வக்கீல் மனைவி.. என கஞ்சா கடத்தலின் மன்னனாக செயல்பட்டதாக மதுரை பரமேஸ்வரனை போலீஸார் கைது செய்துள்ளனர். 165 கார் திருட்டு வழக்குகளில் சிக்கியவர் கஞ்சா கடத்தல்காரரான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

மதுரை மாவட்டம் மதிச்சியம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தி காரில் 80 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திக்கை கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் தான்  சிறிய மீன் தான் என்றும் கஞ்சா கடத்தல் திமிங்கலம் ஒருவர் உள்ளார் என்று பரமேஸ்வரன் என்பவரை போட்டுக் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் கஞ்சா தொழில் செய்து வந்த மதுரையைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பெரிய கோடீஸ்வரர் போல தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக கழுத்து நிறைய தங்க நகைகள், ஆடம்பர காரில் பவனி வந்தவர் மதுரை கண்ணனேந்தல் ஜிஆர் நகரைச் சேர்ந்த பரமேஸ்வரன். கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கடத்திச் சென்று ஆந்திராவில் விற்பனை செய்வதை தொழிலாக கொண்டவருக்கு அங்கிருந்த கஞ்சா கடத்தல்காரர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தால், கார் கடத்தலோடு கஞ்சா கடத்தலை முதன்மை தொழிலாக மாற்றிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

கஞ்சா கடத்தலுக்காக அடிக்கடி வாடகை வீட்டை மாற்றும் பரமேஸ்வரன் தான் பிரஸ் ரிப்போர்டர் என்றும் வக்கீல் என்றும் சொல்லி வந்ததோடு, வீட்டின் மாடியில் புறாக்களையும் வளர்த்து வந்துள்ளான். புறாக்களை பராமரிக்கவும், அதன் எச்சங்களை வாங்கிச் செல்வதற்காகவும் ஆட்கள் வருவார்கள் என்று கூறி புறா கழிவுகள் அடைக்கப்பட்ட மூட்டைக்குள் கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்துச் சென்று தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கைமாற்றி விடுவதை வாடிக்கையாக செய்து வந்ததாக சொல்லப்படுகின்றது.

கடத்தலுக்காக திருட்டு கார்களில் ஆக்டிங் டிரைவர்களை பயன்படுத்திய பரமேஸ்வரன் அவர்களுக்கே தெரியாமல் காரில் கஞ்சாவை ஏற்றிச் செல்வதாகவும், கஞ்சா வரும் காருக்கு முன்பாக கட்சிக் கொடி கட்டிய காரில் செல்லும் பரமேஸ்வரன், பின்னால் வரும் கார் தனது கார் தான் என்றும் ஏதாவது ஒரு அமைச்சர் பெயரை சொல்லி அவர் அவசரமாக வரச்சொல்லி இருப்பதாக கூறி செக்போஸ்டில் நிறுத்தும் காவலர்கள் கண்ணில் மண்ணை தூவி கஞ்சா கடத்தலை பக்காவாக நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

வழக்கில் சிக்கும் போதெல்லாம் ஜாமீன் எடுக்க வேண்டும் என்பதற்காகவே மனைவியை வக்கீலுக்கு படிக்க வைத்துள்ள பரமேஸ்வரன், கஞ்சா கடத்தல் பணத்தில் திண்டுக்கல்லில் பங்களா... நடிகைகளுடன் நட்பு... என்று விலை உயர்ந்த கார்களில் உல்லாச பறவையாக சிறகடித்து பறந்ததாகவும், இந்த நிலையில் தான் பரமேஸ்வரனை ஸ்கெட்ச் போட்டு தூக்கியதாகவும் தெரிவித்த திருப்பாலை போலீஸார் அவரிடமிருந்த 72 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

பரமேஸ்வரனிடம் இருந்து BMW, Fortuner, SKODA உள்ளிட்ட 5 சொகுசு கார்கள், 4 லட்சத்து 30 ஆயிரம் ரொக்க பணம், 73 கிராம் தங்க நகைகள், 14 செல்போன்கள், லேப்டாப், 2 மோடம் மற்றும் 76 சிம் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பரமேஸ்வரன் மீது கார், டூவீலர் திருடியதாக 165 வழக்குகள் பதிவான நிலையில் தற்போது 42 வழக்குகள் மட்டுமே நிலுவை உள்ளதாக கூறப்படுகிறது. தென் மாவட்டத்தில் கஞ்சா உலகின் தாதாவாக செயல்பட்ட பரமேஸ்வனை கைது செய்ததோடு அவரது மனைவியான வக்கீல் விஜயலட்சுமி மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  பரமேஸ்வரனுடன் தொழில் ரீதியாக தொடர்புடையவர்களின் விபரங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments