நாய்க்கு இருக்குற அக்கறை கூடவா.. மனிதர்களிடம் இல்லை..? பட்டப்பகலில் கத்திக்குத்து

0 2115

பழனியில் திரையரங்கின் பின்புறம் கொட்டகை அமைக்க முயன்றவர்களை தடுத்த நகை கடை அதிபரை, திரையரங்க ஊழியர் ஒருவர் விரட்டி விரட்டி கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. மனிதர்கள் மனிதம் மறந்து சிலை போல்  நிற்க, கத்தியால் குத்தும் நபரை நாய் ஒன்று விரட்டிச்சென்ற சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..

பழனி அண்ணா நகரை சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் சதீஷ் ஆனந்த். இவருக்கு சொந்தமான இடம் ஒன்று, வள்ளுவர் திரையரங்கிற்கு பின்புறம் உள்ளது. ஓராண்டுக்கு முன்பாக அந்த இடத்தில் கட்டிடம் கட்டி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்த நிலையில் சதீஷ் ஆனந்த் கட்டியுள்ள கடையில் வாசலை மறித்து, திரையரங்க ஊழியர்கள் கொட்டகை அமைக்க குழி தோண்டியபோது, வாசலை மறைத்து கொட்டகை அமைக்க கூடாது என்று சதீஷ் ஆனந்த் தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆனால் அங்கு கொட்டகை அமைக்க முயன்றவர்களோ அந்த இடம் வள்ளுவர் திரையரங்க உரிமையாளருக்கு சொந்தமானது என்று கூறியுள்ளனர்.

இதனால் சதீஷ் ஆனந்திடம் வாக்குவாதம் செய்த ஆசாமி ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ் ஆனந்தை விரட்டி விரட்டி குத்த ஆரம்பித்தார். விரட்டியபோது கையில் இருந்து தவறி விழுந்த கத்தியை எடுத்து மீண்டும் தாக்கினார்.

மனிதம் மறந்து, அங்குள்ள எவரும் தடுக்காமல் சிலை போல நின்ற நிலையில், எதிர்த்த கடையில் உள்ள வளர்ப்பு நாய் ஒன்று கத்திக்குத்து ஆசாமியை விரட்டிச் சென்றது

அதற்குள்ளாக கடையில் இருந்து வெளியே வந்த நாயின் உரிமையாளர்களான இரு பெண்கள், கையை தட்டி சத்தம் போட்டதால், அந்த நாயும் அந்த கொடூரனை விரட்டாமல் திரும்பிச்சென்று விட்டது

உடலில் 4 இடங்களில் காயம் பட்டு சரிந்த சதீஷ் ஆனந்தை மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கத்திக்குத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தப்பி ஓடிய நபர் வள்ளுவர் திரையரங்கு ஊழியர் ரங்கசாமி என்பதை கண்டுபிடித்தனர்.

கத்தியுடன் ரங்கசாமியை கைது செய்த போலீசார், இந்த கத்திக்குத்தி சம்பவம் தொடர்பாக வள்ளுவர் திரையரங்க ஊழியர்கள் சிலரை பிடித்து விசாரித்து வருவதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சதீஷ் ஆனந்த், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதே நேரத்தில் இருவர் சண்டையிட்டால் தடுக்க வேண்டும் என்று, ஒரு நாயிடம் இருக்கின்ற அக்கறை கூட அதை வளர்ப்பவர்களுக்கோ, அல்லது இந்த சம்பவத்தை வேடிக்கை பார்ப்பவர்களுக்கோ இல்லை என்பதே கசப்பான உண்மை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments