பீகார் தொழிலாளர்கள் பீதி.! கட்டுமானம் - ஓட்டல் தொழிலில் குறிப்பிடத்தக்க பாதிப்பு.!

0 2032
தமிழகத்தில் இருந்து கடந்த சில தினங்களாக கூட்டம், கூட்டமாக வட மாநில தொழிலாளர்கள் வெளியேறியதால் கட்டுமானம் மற்றும் ஓட்டல் தொழில்கள் நேரடி பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்...

தமிழகத்தில் இருந்து கடந்த சில தினங்களாக கூட்டம், கூட்டமாக வட மாநில தொழிலாளர்கள் வெளியேறியதால் கட்டுமானம் மற்றும் ஓட்டல் தொழில்கள் நேரடி பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்... 

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரப்பபட்ட போலியான வீடியோவை உண்மை என்று நம்பி உறவினர்கள் அழைப்பின் பேரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்னை, தாம்பரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட செல்வதாகவும் திரும்பி வந்து விடுவோம் என்று கூறிச்சென்றனர்.

இதுதொடர்பாக கட்டுனர் வல்லுனர் சங்க செயலாளர் வெங்கடேசன் கூறும் போது, தமிழகத்தில் கட்டிடத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்,கட்டுமான தொழில்களில் வட இந்திய தொழிலாளர்களை ஈடுபடுத்துவது கட்டாயமாகி விட்டது என்றார்.

பெருநகரங்களில் நடக்கின்ற பெரும்பாலான கட்டுமானப் பணிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் காளி பூஜை, ஹோலி பண்டிகைகளுக்கு, சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ள இவர்கள் குறைந்தபட்சம் ஒரு மாதம் கழித்து தான் திரும்ப வருவார்கள் என்றும் இவர்கள் திரும்ப வராவிட்டால் 75 சதவீத கட்டுமானத் தொழில் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.

அதே போல சென்னை ஓட்டல் சங்கத்தலைவர் ரவி கூறும் போது, ஓட்டல்களில் வேலை பார்ப்பதை தமிழக இளைஞர்கள் கவுரவ குறைச்சலாக நினைப்பதாகவும், ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர்கள் வெளிநாட்டிற்கும், கப்பலுக்கும் வேலைக்கு சென்று விடுவதால் இங்குள்ள ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு எவரும் வேலைக்கு வருவதில்லை ஆதலால் 60 சதவீதம் வட இந்திய தொழிலாளர்களையே நம்பி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இந்த போலி வீடியோக்களை கண்டு பீதியில், ஹோலிக்கு போவதாக கூறி பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர், இது சாதாரண டீக்கடை முதல் பெரிய ஓட்டல்கள் வரை பாதிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

அதே போல மீஞ்சூரில் தங்கி ரைஸ்மில் வேலைக்கு சென்று வந்த ஜார்கண்ட் தொழிலாளர்கள் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக, 200 பேர் மொத்தமாக சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

பீகார் தொழிலாளர்கள் 100 பேர் தங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தொடர்ந்து அங்கு தங்கி உள்ளனர்.

கோவையில் உள்ள சிறு குறு தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்த வட மாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச்சென்று விட்டதால் வேலைக்கு ஆள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் இருந்தும் வட மாநில தொழிலாளர்கள் சிலர் குழுக்களாக வெளியேறினாலும், பெரும்பான்மையான தொழிலாளர்களிடம் நம்பிக்கையூட்டும் வகையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இங்குள்ள தொழிலாளர்கள் அதிக அளவில் வெளியேறினால் பனியன் தொழில் குறிப்பிடத்தக்க பாதிப்படையும் என்று மில் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்று வரும் அனல் மின்நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்களை சந்தித்த, மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம் அச்சப்பட வேண்டாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments