அதிமுக பொதுக்குழு வழக்கு கடந்து வந்த பாதை.... உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.. முழு விளக்கம்..!

0 1289

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக, ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட அ.தி.மு.க பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் அன்றைய பொதுக்கூட்டத்தில் ஓ.பி.எஸ், அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும், கட்சி அடிப்படை விதிகள் திருத்தம் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து அ.தி.மு.க.வின் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை செல்லாது, சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரி ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் ஜூலை 11 தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து உள்ளிட்டோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை, விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அதில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கான வழிமுறைகள், சட்டவிதிகள் ஆராயப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிசெய்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களுக்கு எதிராக எந்த கோரிக்கையும் தங்கள் முன்பு வைக்கப்படாததால் தீர்மானங்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எதிர்காலத்தில் இது தொடர்பாக வழக்கோ அல்லது தேர்தல் ஆணையத்தில் முறையீடோ யாரேனும் தாக்கல் செய்தால் அப்போது அதன் மீதான விசாரணை நடவடிக்கைகள் இருக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள சிவில் சூட் வழக்கு மீதான விசாரணை நடைபெறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக, ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இடையீடு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments