காதலே வேண்டாம்... சாலையில் படுத்து உருண்டு ரகளை செய்த பெண்கள்..! விஷம் குடிக்க முயன்றதால் பரபரப்பு

0 2922

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலங்குடி அடுத்த கீரமங்கலம் காவல் நிலையத்தின் முன்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொல்ல முயன்றதோடு, சாலையில் படுத்து உருண்டு ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கள் வீட்டு பையனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமான 4 பெண்கள் செய்த உக்கிரமான போராட்ட காட்சிகள் தான் இவை..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பனங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் கட்டுமாவடி பகுதியில் ஆன்லைன் பார்சல் டெலிவரி செய்ய சென்று வந்த போது கார்த்திகா என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது. கணவருடன் விவாகரத்தாகி 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்த கார்த்திகாவுடன், 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய பரமேஸ்வரன் சென்னையில் வசித்து வந்தார்.

இருவரும் கட்டுமாவடிக்கு திரும்பிய நிலையில், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பரமேஸ்வரன் குடும்பத்தினர், இளைஞர் பரமேஸ்வரனை, கார்த்திகாவிடம் இருந்து பிரித்து அழைத்துச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது காதல் கணவரை குடும்பத்தினர் கடத்திச்சென்று விட்டதாக கார்த்திகா கீரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

கீரமங்கலம் போலீசார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், பரமேஸ்வரன் காதலி கார்த்திகாவோடு செல்வதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரனின் தாய் மற்றும் மூன்று சகோதரிகளும், ஓடிச்சென்று இரு சக்கர வாகனத்தில் இருந்த பாட்டிலில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

அங்கிருந்த போலீசார் உடனடியாக அந்த பூச்சி மருந்து பாட்டிலை தட்டி விட்ட நிலையில், 4 பெண்களும் பூச்சிமருந்தை குடித்து விட்டதாக கூறி, சாலையில் படுத்து உருண்டனர், சிலர் அப்படியே படுத்தும் கிடந்தனர்.

போலீசார் கண்டு கொள்ளாமல் இருந்ததால் மயங்கியது போல கிடந்த பெண்ணை தூக்கிக்கொண்டு, காவல் நிலைய வாசலில் போட்டு ரகளை செய்தனர்.

பரமேஸ்வரன் குடும்பத்து பெண்களுடன் வந்திருந்த ஆண்களும் தங்கள் பங்குக்கு ரகளையில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் 4 பெண்களையும் மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் விஷம் அருந்துவதை தடுக்கச் சென்ற வினிதா என்ற காவலரின் கண்களில் பூச்சி மருந்து பட்டதால், அவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காதலில் விழுந்த தங்கள் வீட்டு பையனின் மனதை மாற்ற, குடும்பமே விஷம் குடிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments