முதியவரை தாக்கி, சட்டைப் பையில் இருந்த பணத்தை பறித்து தகராறில் ஈடுபட்ட 5 வடமாநில இளைஞர்கள்..!

கரூர் பேருந்து நிலையத்தில், பேருந்தில் இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் முதியவரை தாக்கி பணம் பறித்துச்சென்ற வடமாநில இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
போக்குவரத்துத்துறையில் பணியாற்றிவரும் புலியூரை சேர்ந்த செல்வராஜ், வியாழக்கிழமை அன்று இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக, திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி தனக்கும், தனது நண்பருக்கும் இருக்கை பிடித்துள்ளார்.
அப்போது பேருந்தில் ஏறிய ஐந்து வடமாநில இளைஞர்கள் அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு செல்வராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதோடு, அவரது சட்டைப்பையிலிருந்து ஏழாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. உடனே பேருந்தை விட்டு கீழே இறங்கிய செல்வராஜ் சத்தமிட்டதை தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள், அவர்களை பிடிக்க முயன்றபோது, நான்கு பேர் தப்பிய நிலையில் ஒருவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
போலீசார் விசாரித்து கொண்டிருக்கும்போது, பிடிபட்ட ஒருவனும் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
Comments