விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடியை 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை..!
ஆண்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடியை 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க ஊசி செலுத்தி வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
டி. சுப்புலாபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கோம்பையில், மாரிமுத்து வழக்கம்போல் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தார்.
மலையிலிருந்து தண்ணீர் தேடி கீழே இறங்கிவந்த கரடி ஒன்று வேகமாக மாரிமுத்து வீட்டைநோக்கி சென்றது. இதைப் பார்த்த விவசாயி மாரிமுத்து வீட்டின் வெளியே சமைத்துக் கொண்டிருந்த தனது மனைவியை பார்த்து ஓடி வரும்படி கூறியதை அடுத்து அவரும் தோட்ட பகுதிக்கு ஓடி வந்து தனது கணவர், மகனிடம் அடைக்கலம் அடைந்தார்.
இந்நிலையில் மலையிலிருந்து வேகமாக இறங்கி வந்த கரடி மாரிமுத்து வீட்டுக்குள் நுழைந்தது . வீட்டின் முன்பிருந்த நாய் குறைத்ததால் அதை தாக்கிவிட்டு உள்ளே சென்ற கரடி வீட்டில் இருந்த உணவு பண்டங்களை தின்றுவிட்டு பதுங்கிக் கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி ஆண்டிபட்டி வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த வனதுறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட மயக்கவியல் நிபுணர்களின் உதவியோடு மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
Comments