மேடையில் தள்ளாடிய மாப்பிள்ளை.. செக் வைத்த மணப்பெண், ‘திருமணத்தை நிறுத்தினார்’..! தங்கசங்கிலியை கழற்றி வாங்கினர்..!
திருமண வரவேற்பின் போது மாப்பிள்ளை 3 முறை மயங்கி விழுந்ததோடு, ரகளையில் ஈடுபட்டதால் மது போதையில் இருப்பதாக கருதி மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தினார். மணமகனிடம் இருந்து தங்க சங்கிலி மற்றும் மோதிரத்தை கழற்றி வாங்கிய போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற போது பெண் வீட்டார் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது....
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் - கேளம்பாக்கம் இடையே மாம்பாக்கம் தனியார் மண்டபத்தில் மாம்பாக்கம் ஊராட்சி செயலர் டில்லிபாபு என்பவரின் மகன் சுர்ஜித் என்கின்ற லட்சுமி நரசிம்மனுக்கும் தையூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. காலையில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன், போதையில் இருப்பது போன்று மேடையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், மணப்பெண் அருகில் வரவேற்பு மேடையிலேயே மயங்கி விழுவதுமாக இருந்ததாக கூறப்படுகின்றது.
அரசியல் கட்சி நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர்கள் என வருவாய்த்துறை அலுவலர்கள் என நிறைய விஐபிக்கள் வந்திருந்த நிலையில் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த மணப்பெண், தனது பெற்றோரை அழைத்து மணமகனின் தள்ளாட்டம் குறித்து வேதனை தெரிவித்தார்.
இதையடுத்து பெண் வீட்டார் வரவேற்பு நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தினர். மாப்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கைகலப்பு உருவாகும் சூழ் நிலை உருவானதால் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மண்டபத்துக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் மணமகன் மற்றும் அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். மணமகன் போதை ஊசியோ, மதுவோ அருந்தவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்
அப்போது மாப்பிள்ளை சுர்ஜித் நான் செய்தது தவறு என்னை மன்னித்து விடுங்கள் என்று கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். ஒரு வேளை மாப்பிள்ளை கஞ்சா குடித்திருப்பாரோ ? என்ற சந்தேகம் எழுந்ததால் திருமணம் ஆவதற்கு முன்னதாகவே போதையில் ரகளையில் ஈடுபடும் இந்த இளைஞருடன் எங்கள் வீட்டு பெண்ணை கட்டிக் கொடுக்க முடியாது என்று பெண் வீட்டார் திட்டவட்டமாக மறுத்ததோடு, இதற்கான மொத்த செலவையும் அவர் தான் ஏற்க வேண்டும் என்றனர்.
மாப்பிள்ளைக்கு அணிவித்த தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், தங்க கை கடிகாரம் உள்ளிட்டவைகளை திரும்ப பெற்று பெண் வீட்டார் திருமணத்தையே நிறுத்துவதாக அறிவித்தனர். இதனால் சுர்ஜித் தங்க நகைகளை வெறுப்புடன் கழற்றி கொடுத்தார்..
போலீசார் மணமகன் சுர்ஜித்தை பாதுகாப்பாக வெளியே அழைத்து சென்றபோது மண்டபத்தில் இருந்த நாற்காலியை மணமகன் தூக்கி வீசியதால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், ஒரு பெண்ணின் திருமண கனவை சிதைத்ததோடு ரகளை வேறு செய்கிறாயா என்று அவரை விரட்டிச்சென்று அடிக்க பாய்ந்தனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்த மாப்பிள்ளை வீட்டாரை பாதுகாப்பாக மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் தாழம்பூர் போலீசார் மாப்பிள்ளை வீட்டாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments