பெட்டிக்கடையில் மிக்சரை தட்டிப்பறித்த காவலர்கள் சிசிடிவி வெளியானதால் ரைடு..! நல்லா இருக்கு உங்க நியாயம்

0 2931

சென்னை திருவல்லிக்கேணியில் மதுக்கடை பாருக்கு அருகில் உள்ள பேக்கரியில்  காவலர்கள் சிலர் மிக்சர் பாக்கெட்டுகளை பறித்துச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தரமற்ற பொருட்களை விற்பனை செய்ததால் சோதனை நடத்தியதாக போலீசார் சமாளித்த நிலையில் 3 தினங்கள் கழித்து  உணவு பொருள் பாதுகாப்புத்துறையினரை ஏவி ரைடு நடத்தியதாக புகார் எழுந்துள்ளது

சென்னையில் மதுக்கடை பாருக்கு அருகில் செயல்படும் பேக்கரி மற்றும் பெட்டிக்கடைகளில் நொறுக்குதீனி, வாட்டர் பாட்டில் மற்றும் கிளாஸ் விற்பதை காவல் துறையினர் தடுப்பது தொடர்கதையாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

அந்த வகையில் திருவல்லிக்கேணியில் மதுக்கடை பாருக்கு அருகில் செயல்பட்டு வந்த கருணாஸ் பேக்கரிக்கு கடந்த 7 ந்தேதி இரவு சென்ற ராஜதுரை, லோகேஷ், மணிகண்டன் ஆகிய திருவல்லிக்கேணி காவலர்கள் கடையில் இருந்த சில நொறுக்கு தீனி பாக்கெட்டுகளை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியானது

சிசிடிவி காட்சி வெளியானதால் ஆத்திரம் அடைந்த போலீசார் காட்சிகள் பதிவாகும் ஹார்ட்டிஸ்க்கை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதோடு 8 ந்தேதி கடையையும் இழுத்துப் பூட்டினர். மதுப்பிரியர்களுக்கு நொறுக்கு தீனி விற்றதால் அங்கு கூட்டம் கூடியதாக 75 பிரிவின் கீழ் அந்த கடை உரிமையாளரை பிடித்து வைத்தனர். வணிகர்சங்கத்தினர் வந்ததால் அவரை விடுவித்தனர்.

9 ந்தேதி கருணாஸ் பேக்கரி உரிமையாளர் கடையை திறந்து வியாபாரம் செய்ததால் , அங்கு தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு போலீசார் தகவல் அளித்தனர்

அதன் பேரில் 10 ந்தேதி அந்த கடைக்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் , அங்கு fssai சான்று இல்லாத 10 கிலோ நொறுக்கு தீனி பாக்கெட்டுகளை கைப்பற்றி 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துச்சென்றனர்.

போலீசார் மிக்சர் பாக்கெட்டை பறித்துச் சென்றது தொடர்பாக விளக்கம் அளித்த காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், அங்கு தரமில்லா உணவுபொருட்கள் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் 3 காவலர்களை அனுப்பி நடவடிக்கை எடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

தரமில்லா பொருட்கள் தொடர்பான புகார் என்றால் அதனை உணவு பொருட்கள் பாதுகாப்பு துறையினர் தான் மேற்கொள்ள வேண்டும், போலீசார் பாதுகாப்புக்கு மட்டுமே செல்ல முடியும். இங்கு போலீசாரே நேரடியாக சென்று அத்துமீறலில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகளால் அம்பலமானதால் போலீசார் அதை சமாளிக்க புது விளக்கம் அளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட பேக்கரி உரிமையாளர் கணேசன் வேதனை தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments