என்ஜினீயர் படிச்சேன் முறையான வேலையில்ல, அதான் டாக்டராயிட்டேன்..! கூகுள் ஆண்டவர் அருளால் சிகிச்சை
சென்னையில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை கிடைக்காததால் கூகுல் உதவியுடன், மருத்துவம் பார்த்ததுடன், சொந்தமாக மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். அசல் மருத்துவரின் பெயரில் வலம் வந்த போலி மருத்துவரின் தில்லுமுல்லு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
நீட் தேர்வு எழுதவில்லை... லட்சக்கணக்கில் பணத்தை கொட்டவும் இல்லை... 5 வருடம் மருத்துவம் படிக்கவும் இல்லை... ஆனால் தன்னை பிரபல மருத்துவராக மருத்துவ கவுன்சிலில் பதிந்த டுபாக்கூர் மருத்துவரால் மிரண்டு போயுள்ளது மருத்துவ வட்டாரம்..!
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் செம்பியன். இவர் டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் எம்டி மருத்துவ மேற்படிப்பை முடித்துள்ள அவர் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் மீண்டும் தமிழகத்திலே குடியேறலாம் என தனது மேற்படிப்பு சான்றிதழை மெடிக்கல் கவுன்சில் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்ய முயன்றுள்ளார். ஆன்லைனில் முடியாததால் மருத்துவர் செம்பியன் அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அங்கு வேறு ஒருவர் புகைப்படம், தொலைபேசி எண் மற்றும் இ மெயில் முகவரியில் செம்பியனின் பெயர் பதிவாகி இருந்தது.
இதையடுத்து மருத்துவர் செம்பியன் மெடிக்கல் கவுன்சில் மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், செம்பியன் என்ற பெயருடைய மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏரோ நாட்டிக்கல் பொறியாளர் ஒருவர் இந்த மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த 2017 ஆம் ஆண்டு வேலைதேடி சென்னை வந்த என்ஜினீயர் செம்பியன், உரிய வேலை கிடைக்காததால் JUST DIAL நிறுவனத்திலும் அதனை தொடர்ந்து அகட்டா என்ற தனியார் மருத்துவமனையில் மார்கெட்டிங் வேலையிலும் சேர்ந்துள்ளார்.
அங்குள்ள மருத்துவர்கள் கூகுள் உதவியுடன் தேடி நோயாளிகளுக்கு மருந்துகளை சிபாரிசு செய்வதை கண்டார். மருத்துவர்களின் சிகிச்சை முறை பற்றி நன்கு தெரிந்து கொண்ட அவர், தானும் மருத்துவராக மாற முடிவு எடுத்தார்.. இதற்காக FIRST AID, FIRE AND SAFETY, SCAN போன்ற டிப்ளமோ படிப்புகளை படித்துள்ளார்.
தமிழகத்தில் தனது பெயரில் உள்ள மருத்துவர்களை கூகுள் மூலமாக தேடி, தனது வயதுக்கு ஏற்ற தஞ்சையை சேர்ந்த மருத்துவர் செம்பியனை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் வெப்சைட்டிற்கு சென்று தொலைபேசி எண் மற்றும் இ மெயில் ஆகியவற்றில் தனது விவரங்களை பதிவு செய்து, நிஜ மருத்துவர் செம்பியனின் புரோபைலில் இருந்த புகைப்படம் மற்றும் முகவரியை நீக்கிவிட்டு, தனது புகைப்படம் மற்றும் முகவரியை போட்டோ சாப் மூலமாக மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த போலி மருத்துவரான செம்பியன் அஸ்ட்ரா மருத்துவமனை மற்றும் நீலாங்கரையில் உள்ள சாந்தி மருத்துவமனை ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். கொரோனா காலம் என்பதால் மருத்துவர்களின் தேவை அதிகமாக இருந்ததால் சான்றிதழ்களை யாரும் முறையாக சரிபார்க்க வில்லை என்று கூறப்படுகின்றது.
அவருக்கு கிடைத்த மிதமிஞ்சிய பணத்தால் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக தரமணியில் ஸ்பார்க் பேமிலி கிளினிக் என்ற பெயரில் மெடிக்கலுடன் கூடிய மருத்துவமனை ஒன்றை சொந்தமாக தொடங்கி உள்ளார்.
கூகுள் உதவியுடன் எந்த நோய்க்கு எந்த மருந்து என்று நோயாளிகளுக்கு கொடுத்து வந்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் போலி மருத்துவர் செம்பியனை கைது செய்ததாக தெரிவித்தனர்.
Comments