நெற்றியில் காயத்துடன் வாணிஜெயராம் உயிரிழப்பு.. வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு..!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பிரபல சினிமா பின்னணி பாடகி வாணி ஜெயராம் நெற்றியில் காயத்துடன் வீட்டில் மர்ம மான முறையில் உயிரிழந்து கிடந்தார். பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திறந்து சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்
இந்திய திரை உலகின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
10 வருடங்களுக்கு முன்பாக கணவர் இறந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த வாணி ஜெயராம் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.
காலையில் வழக்கம் போல் வேலைக்கு வந்த பணிப்பெண் தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படாததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது சகோதரி உமாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் வந்து அப்பார்ட் மெண்ட் அசோசியேஷன் உதவியுடன் மாற்று சாவியை எடுத்து வந்து காவல்துறையினர் முன்னிலையில் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, நெற்றியில் காயத்துடன் வாணி ஜெயராம் சடலமாக கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து வீட்டிற்குள் யாராவது இருக்கின்றனரா ? என்பதை தீவிரமாக ஆய்வு செய்த பின்னர் போலீசார் வாணி ஜெயராமின் சடலத்தை கைப்பற்றி பிணகூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தடயவியல் துறையினரை வரவழைத்து வாணி ஜெயராம் வீட்டில் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.
78 வயதானாலும் வாணிஜெயராம் ஆரோக்கியமான நிலையில் இருந்ததாக பணிப்பெண் வாக்கு மூலம் அளித்த நிலையில் வாணி ஜெயராமின் மரணம் இயற்கைக்கு மாறானது என்ற பொருளில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
Comments