கல்குவாரிக்கு எதிராக போராடியவர் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டாரா? மக்கள் மறியலால் பரபரப்பு..!

0 3471

நெல்லை மாவட்டம் ஊரல்வாய்மொழியில் கல்குவாரி லாரி மோதி விவசாயி பலியான நிலையில் கல்குவாரியை கண்டித்து மறியல் போரட்டம் நடத்தியவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். கல்குவாரிக்கு எதிராக போராடியவர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுக்காவில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. கடந்த வருடம் ஒரு கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலியானதால் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்குவாரிகள் அனைத்தும் மீண்டும் கற்களை உடைத்து லாரிகளில் ஏற்றி அனுப்பி வருகின்றன.

அனுமதியோடு நடத்தப்பட்டாலும் இந்த கல்குவாரிகளை கண்டித்து சுற்றி இருக்கும் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதில் ஊரல்வாய் மொழியை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவரும் கல்குவாரிக்கு எதிராக போராடியுள்ளார்.

சம்பவத்தன்று மாலை தனது தோட்டத்துக்கு சென்று விட்டு இருசக்கரவாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கண்ணன் மீது பின் பக்கமாக வந்த கல்குவாரி லாரி ஒன்று மோதியதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.

கண்ணன் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டிய அக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பலியான கண்ணன் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை சடலத்தை எடுக்க விடபோவதில்லை என்று ஆவேசமாயினர்.

வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் அடையவில்லை. சம்பவ இடத்துக்கு வள்ளியூர் டி.எஸ்.பி யோகேஸ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றனர்

அங்கு சென்று சடலத்தை எடுக்க முயன்றதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கல்குவாரி லாரி மோதி பலியான கண்ணன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கல்குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அவர் கொல்லப்பட்டாரா ? என்று விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்த பின்னர் சடலத்தை எடுத்துச்செல்ல அனுமதித்தனர்.

மேலும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து கிராமத்து மக்களையும் , கல்குவாரி உரிமையாளர்களையும் அழைத்து பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததை ஏற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த பகுதியில் அதிவேக கல்குவாரி லாரிகளால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதாக குற்றஞ்சாட்டிய பொது மக்கள், பலர் காயம் அடைந்திருப்பதகவும், சில தினங்களுக்கு முன்பு இருவர் பலியான நிலையில் தற்போது கண்ணன் பலியாகி உள்ளதாக தெரிவித்தனர்.

உயிரிழந்த கண்ணனுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை என்றும் அவரது மனைவி கணவனை பறிகொடுத்து விட்டு நிற்கதியாக தவிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments