இத்துப்போன காதலுக்கு செத்து போன கணவனின் எலும்புக்கூடு சாட்சியானது..! மண்டை ஓட்டால் விலகிய மர்மம்

0 3126

காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்து ஏரிக்கரையில் புதைத்த நிலையில் வெளியே வந்த எலும்புக்கூடால் மனைவி, காதலனுடன் போலீசில் சிக்கிய சம்பவம் திருப்போரூர் அருகே  நடந்துள்ளது

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை புதர் பகுதியில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் சிதறி கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் தலைமையில் போலீசார் நேரடியாக சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் அப்போது சிதறிக் கிடந்த மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு ஆகியவற்றை மருத்துவ குழுவினரின் உதவியுடன் சேகரித்து ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த வெள்ளப் பந்தல் கிராமத்தில் உள்ள வயல் வெளி பம்ப் செட் வீட்டில் கைக்குழந்தையுடன் தங்கியிருந்த கணவன் மனைவி சில வாரங்களாக தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் அவர்களது விவரத்தை சேகரித்த போலீசார் , ஒரு வழியாக அந்த பம்பு செட் வீட்டில் தங்கி இருந்த சித்ரா என்ற 26 வயது பெண்ணை கண்டுபிடித்தனர்.

முதலில் தனது கணவன் மாயமானதாக சமாளித்த அந்தப்பெண்ணிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசாரிடம் சிக்கிய எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓட்டின் மர்மம் விலகியது

மாதுளங்குப்பத்தை சேர்ந்த சந்திரனுக்கும் , சித்ராவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் இருவரும் துரைபாபு என்பவரின் வயல் வெளியைப் பார்த்துக் கொண்டு அங்கேயே பம்ப் செட் வீட்டில் தங்கியிருந்தனர்.

சித்ராவுக்கு மையூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் திருமணம் கடந்த தவறான உறவு இருந்துள்ளது.

கடந்த மாதம் சக்திவேலும், சித்ராவும் தனிமையில் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த சந்திரன் இருவரையும் சரமாரியாக தாக்கி உள்ளார்.

பதிலுக்கு திருட்டு காதலர்கள் இருவரும் சேர்ந்து கட்டையால் தாக்கி சந்திரனை கொலை செய்துள்ளனர்.

கொலையை மறைக்க சந்திரனின் சடலத்தை ஏரிப் பகுதியில் குழி தோண்டி புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக சித்ரா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலை நடந்த சமயம் மழைக்காலம் என்பதால் ஆழமாக இல்லாமல் 1 அடி ஆழத்தில் குழி தோண்டி சடலத்தை புதைத்துள்ளனர்.

ஏரிப்பகுதியில் நீர் வற்றி வறண்டு போனதால், அழுகிய சடலத்தின் பாகங்கள் மேலே தெரிந்திருக்கலாம் என்றும் அதனை நாய் கடித்து இழுத்ததால் எலும்பு கூடுகளாக அவை சிதறி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

கொலை வழக்கில் சித்ரா, சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திருமணம் கடந்த தவறான உறவால் கணவனை கொலை செய்து விட்டு 2 வயது குழந்தையுடன் தாய் சிறைக்கு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments