கூட்டுறவு வங்கியில் ரூ.2.60 கோடி கொள்ளை.. கணினியை ஹேக் செய்து நைஜீரியர்கள் துணிகரம்.. டெல்லிக்குச் சென்று தூக்கிய தமிழ்நாடு போலீஸ்..!
டெல்லியில் 8 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி, அங்கிருந்து ஸ்கெட்ச் போட்டு சென்னை மண்ணடியில் உள்ள கூட்டுறவு வங்கியில் இரண்டரை கோடி ரூபாய் ஆட்டையைப் போட்ட நைஜீரிய ஹேக்கர்கள் குறித்து விளக்குகின்றது இந்த செய்தித்தொகுப்பு...
சென்னை மண்ணடியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில், கடந்த நவம்பர் 18ம் தேதி காலையில் வங்கியின் இருப்பை சோதித்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வங்கியின் கணக்கிலிருந்து இரண்டு கோடியே 61 லட்சத்தை ஹேக்கர்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்றியிருந்தனர்.
உடனடியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதால், சைபர் க்ரைம் போலீஸார் விசாரணையில் இறங்கி ஒரு மணி நேரத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை ஹேக்கர்களின் வங்கி கணக்கிலிருந்து மீட்டனர். மீதித்தொகை நைஜீரியா நாட்டில் உள்ள 2 வங்கிகளில் பரிவர்த்தனை செய்யப்பட்டு கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டிருந்ததையும் சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடித்தனர்.
மேலும், பரிவர்த்தனை நடத்திய கணினியின் ஐ.பி முகவரியைக் கொண்டு, டெல்லி உத்தம் நகரிலிருந்து செயல்பட்ட நைஜீரிய நாட்டின் ஏக்னே காட்வின், அகஸ்டீன் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், இணையத்துடன் இணைந்த கோர் பேங்கிங் சிஸ்டத்தை இந்த வங்கி மட்டுமே பயன்படுத்தியதால், வங்கிக்கு ஃபிஷிங் மெயில் அனுப்பி, அந்த லிங்க்கை கிளிக் செய்த உடன் வங்கிக்கே தெரியாமல் key logger, மற்றும் ng rok செயலிகளை அப்லோடு செய்துள்ளதாக கூறியுள்ளனர்..
ஆகஸ்ட் மாதத்திலிருந்து வங்கி நடவடிக்கைகளை கவனித்து 3 மாதத்திற்குப் பிறகே கொள்ளையடித்ததாகவும், இதற்காக, டெல்லி, மும்பை உள்பட பல இடங்களில் 32 போலி வங்கிக் கணக்குகளையும் துவங்கியதாகவும், கைதான நைஜீரியர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தம் நகரில் தங்கியிருந்து ஏராளமான நைஜீரியர்கள் இதுபோன்ற சைபர் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக போலீஸார் அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டு உள்ளனர்.
Comments