உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் இன்று தொடக்கம்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் இன்று தொடங்குவதையொட்டி கத்தார் விழாக்கோலம் பூண்டுள்ளது. விளையாட்டை நேரில் காண வெளிநாடுகளில் இருந்து ரசிகர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி, அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் இன்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. இதையொட்டி ஒட்டுமொத்த கத்தார் தேசமும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
அடுத்த மாதம் 18-ம்தேதி வரை நடைபெறும் கால்பந்து தொடரில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவற்றின் வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஏற்கனவே வந்து சேர்ந்துவிட்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து ரசிகர்கள் அலை அலையாக குவிந்து வருகின்றனர். பூங்காக்கள், திறந்தவெளிகளில் ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உலா வருகின்றனர்.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக 17 லட்சம் கோடி ரூபாயை கத்தார் செலவிட இருப்பதாகக் கூறப்படுகிறது. போட்டியை நேரில் கண்டு ரசிக்க சுமார் 15 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்காக குடியிருப்புகள், ஓட்டல்கள், ஆயிரக்கணக்கான தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அண்டை நாடுகளில் தங்கி போட்டிகளைக் காண கத்தாருக்கு செல்லவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதால் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
போட்டிகளைக் காணவரும் ரசிகர்களுக்காக ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களையும் கத்தார் செய்துள்ளது. நேரில் காண முடியாத ரசிகர்களுக்காக பிரமாண்ட திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
இப்போட்டியில் விளையாட உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்கள் வருகை தந்துள்ளனர். அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்சி, போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ, பிரேசிலின் நெய்மர், பிரான்சின் க்ளியன் எம்பாப், பெல்ஜியம் அணியின் கெவின் டி ப்ரூயின் ஆகியோரின் ஆட்டங்களால் மைதானம் களைகட்டும் என எதிர்பார்க்கலாம். கரிம் பென்சிமா, ஹேரி கேன், வினிசியஸ், லுகா மோட்ரிக் ஆகியோரின் ஆட்டங்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய வாய்ப்புள்ளது.
இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Comments