3 ஆம் வகுப்பு மாணவனை பள்ளிக்கு வெளியே நிறுத்தி தண்டனை..! தனியார் பள்ளியின் கட்டண அடாவடி
கொடைக்கானல் பள்ளி ஒன்றில் பணியாற்றிய தாயுடன் ஏற்பட்ட சம்பள பிரச்சனையால், அங்கு 3 ஆம் வகுப்பு படித்து வரும் மகனை கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று பள்ளி நிர்வாகம் வெளியில் நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது
கொடைக்கானல் கீழ்பூமி அருகே உள்ள பிருந்தாவன் பப்ளிக் பள்ளி நிர்வாகம் தான், பள்ளியில் வேலை பார்த்த தாய் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று மகனை வெளியே நிற்க வைத்த சர்ச்சையில் சிக்கி உள்ளது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் வசித்து வரும் நாகேந்திரன் மனைவி சரண்யா இவர் பிருந்தாவன் பள்ளியில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் பணியில் இருந்து நின்றுவிட்ட சரண்யாவுக்கு பள்ளி நிர்வாகம் 17 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளப்பாக்கியை கொடுக்காமல் நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அந்த பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வரும் தனது மகனுக்கு 17 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணத்துக்கு பதில் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தி சேர்த்து விட்ட சரண்யா, மீதி பணத்தை தனது சம்பளபாக்கித்தொகையில் கழித்துக் கொள்ள கூறியுள்ளார்.
ஆனால் சரண்யாவுக்கு சம்பளப்பாக்கி ஏதுமில்லை என்று தெரிவித்த பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்தக்கோரி மாணவனுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் வியாழக்கிழமை , கல்விகட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி அந்த மாணவனை பள்ளிக்கு வெளியே நிற்க வைத்து பள்ளி நிர்வாகம் தண்டனை வழங்கி உள்ளது
3 ஆம் வகுப்பு படித்து வரும் தனது மகன் பள்ளிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் அறிந்து விரைந்து சென்ற சரண்யா தனது மகனுக்கு நியாயம் கேட்டு பள்ளிக்கு வெளியே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது
தான் பள்ளியில் வேலை பார்க்காததால் தான் மகனை வெளியே நிற்க வைத்திருப்பதாக பள்ளி நிர்வாகம் எழுதி கொடுத்தால் போதும் எனது மகனை அழைத்துக் கொண்டு பள்ளியை விட்டு சென்று விடுகிறேன் என்று சரண்யா தெரிவித்தார்
போலீசாரும் , வருவாய் துறை அதிகாரிகளும் வந்து நடந்த சம்பவம் தொடர்பாக மாணவனிடம் விசாரித்தனர்
கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவனுக்கு தண்டனை கொடுக்க கூடாது என்று ஏற்கனவே அரசு எச்சரித்து இருப்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து பள்ளி நிர்வாகம், இனிமேல் இது போல மாணவனை வெளியில் நிறுத்த மாட்டோம் என்று கூறி அவனை மீண்டும் பள்ளிக்கும் அழைத்துச்சென்றதால் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
Comments