விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை.. வெள்ளக்காடானது சீர்காழி...! 122 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை

0 3544
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும் விளைநிலங்களிலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும் விளைநிலங்களிலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. அம்மாவட்டத்தில் சராசரியாக 25 சென்டி மீட்டர் மழையும், அதிகபட்சமாக சீர்காழியில் 44 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இது கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையின் காரணமாக சீர்காழி நகராட்சிக்குட்பட்ட எஸ்.கே.நகர், சூரக்காடு, திருவள்ளூர் நகர், பாலசுப்பிரமணிய நகர், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளம் போல் மழை நீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம், சீர்காழி சட்டை நாதர் ஆலயத்திலும் முழங்கால் அளவு மழை நீர் தேங்கியது. தரங்கம்பாடி பகுதியில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததோடு, ஒரு மூதாட்டி வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. செம்பனார்கோவில் பகுதியில் மரம் சாய்ந்து மின் ஒயர்கள் அறுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கனமழையால் சீர்காழி அருகேயுள்ள உப்பனார் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பள்ளம் கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதே போல, திருமுல்லைவாசல் - தொடுவாய் செல்லக்கூடிய தரைப்பாலம் திடீரென உள்வாங்கியதில், அவ்வழியாக பால் ஏற்றிச் சென்ற வேன் அதில் சிக்கிக் கொண்டது. நீண்ட போராட்டத்துக்கு பின் அந்த வேன் மீட்கப்பட்டது.

இதனிடையே, தேனூர் கதவணையில் இருந்து வரும் பிரதான வாய்க்காலான முடவன் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்கள் நீரில் மூழ்கின. மயிலாடுதுறையில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியதாக கூறிய விவசாயிகள், தண்ணீர் வடிய ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்பதால் பேரிழப்பு ஏற்படும் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தாழ்வான பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேவையான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments