பேண்ட் அணியாத லாரி ஓட்டுனருக்கு ரூ.500 அபராதம்..! கண்ணீர் விட்டு கெஞ்சிய காட்சி..!
காக்கி பேண்ட் அணியவில்லை என்று 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால், லாரி ஓட்டுனர் ஒருவர் கண்ணீர் விட்டு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டார். போக்குவரத்துக்கு இடையூறாக கனரக வாகனங்களை சாலையில் நிறுத்தி வசூல் பணியில் ஈடுபட்ட கறார் காவல் ஆய்வாளர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
சென்னை எண்ணூர் - துறைமுகம் விரைவுச்சாலையில் மணலி சிபிசிஎல் சந்திப்பு வளைவு பகுதியின் அருகில் கனரக வாகனங்களை மறித்த போக்குவரத்து காவலரால் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..
ஏராளமான கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தி வைக்கப்படிருந்த சூழலில், தனது சுமோ காருக்குள் அமர்ந்திருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்த லாரி ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.
காக்கி நிற சட்டை அணிந்திருந்த அந்த லாரி ஓட்டுனர், பேண்ட் அணியவில்லை என்பதற்காக 500 ரூபாய் அபராதம் விதித்ததால், அவர் அழுதபடியே முறையிட்டுக் கொண்டு இருந்தார்.
ஒரு நாள் முழுவதும் கண்விழித்து லாரி ஓட்டினால் தனக்கு கிடைப்பது 500 ரூபாய் தான்... அதையும் அபராதமாக விதித்தால் என்ன செய்வேன் ? என்று ஆதங்கம் தெரிவித்த ஓட்டுனரிடம் அபராதத்தை உன் ஓனர் கட்டுவான் போ.. என்று கையை ஓங்கி அடிப்பது போல விரட்டினார் அந்த காவல் ஆய்வாளர்...
தனது ஒரு நாள் உழைப்பு அபராதமாக போய்விட்டதே என்று கையில் அபராத ரசீதுடன் பரிதாபாக நின்றார் அந்த லாரி ஓட்டுனர்
பேண்ட் போடாதது போக்குவரத்து விதிக்கு எதிரானது என்று அபராதம் விதித்த அந்த காவல் ஆய்வாளரிடம், சாலையில் இத்தனை கனரக வாகனங்களை நிறுத்தி வைத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது சாலை விதி மீறல் இல்லையா? என்று நமது செய்தியாளர் கேள்வி எழுப்பியதும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளை அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல உத்தரவிட்டார்..
மழையால் சாலை எங்கும் குண்டும் குழியுமாக உள்ளதே அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பியதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், குழிகளில் ரப்பீஸ் கொட்டி சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறி சமாளித்தார்... குழிகள் ஏதும் சரிசெய்யப்படவில்லையே... உடன் வருங்கள் பார்க்கலாம் என்று அழைத்த போது வர மறுத்து காருக்குள்ளேயே பம்மினார் அந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மழையால் பனியார சட்டிபோல சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றது. சில இடங்களில் மரண பள்ளங்கள் உருவாகி உள்ளது. அவற்றை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கத்துடன் கூடிய கோரிக்கையாக உள்ளது.
Comments