வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநில சிறுவன் கைது
சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநில சிறுவன், சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டான்.
ஜான்ராஜன் என்பவர் கடந்த 11ஆம் தேதி பீனிக்ஸ் மாலுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்குள்ள பிளே ஏரியாவில் தனது பாக்கெட்டில் இருந்த ஐபோன் மாயமானதை கண்டறிந்த அவர், அது குறித்து போலீசாரிடம் புகாரளித்தார்.
மாலின் சி.சி.டி.வி.களை ஆய்வு செய்த போலீசார், சிறுவன் ஒருவன் கையில் கவரை வைத்து மறைத்து செல்போனை திருடியதை கண்டறிந்தனர். இது குறித்து, 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
அவனிடம் நடந்த விசாரணையில், ஜார்க்கண்ட்டில் இருந்து வேலைக்கு வருவது போல் ஐந்து பேர் கொண்ட கும்பல் சென்னையில் வந்து தங்கி, மால்களை குறிவைத்து செல்போன் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக எந்த இடத்தில் கைவரிசை காட்ட வேண்டும் என வடமாநில கும்பல் செல்போன் மூலமாக சிறுவனுக்கு தகவல் தெரிவிப்பார்கள், சொன்ன இடத்திற்கு சிறுவன் மட்டுமே சென்று செல்போன் திருடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது
Comments