பெண்ணை கடத்தி பலாத்காரம்... ரவுடி கட்டை முருகன் கைக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ்..!

0 3698
பெண்ணை கடத்தி பலாத்காரம்... ரவுடி கட்டை முருகன் கைக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ்..!

தூத்துக்குடியில் வேலைக்கு சென்று விட்டு தனியாக வீடுதிரும்பிய பெண்ணை கத்திமுனையில் கடத்திச்சென்று பலாத்காரம் செய்த ரவுடி சாலையில் சறுக்கி விழுந்து கையை முறித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. கத்தி எடுத்த கைக்கு மாவுகட்டு போட்டு விட்ட போலீசின் மனிதநேய மிக்க நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தூத்துக்குடியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் வேலைக்கு சென்று விட்டு தன்னுடைய வீட்டிற்கு கடந்த 14 ம் தேதி இரவு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த ரவுடி கட்டை முருகன் கூட்டாளி கோகுல்ராம் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்து பெண்ணை வழிமறித்துள்ளனர்.

சத்தம் போடக்கூடாது என்று கத்தியை காட்டி மிரட்டி அந்தப்பெண்ணை தங்களது இரு சக்கர வாகனத்தில் கடத்திக் கொண்டு சென்று தருவைக்குளம் கல்மேட்டில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கட்டை முருகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பின்னர் மறு நாள் காலையில் பெண்ணை தனை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி அவரது வீட்டருகில் உள்ள சந்திப்பில் இறக்கிவிட்ட ரவுடி கட்டை முருகன், நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டிச் சென்றுள்ளான். தனக்கு நடந்த கொடுமையை வெளியில் சொல்ல இயலாமல் அந்தப்பெண் தவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கட்டை முருகனின் கூட்டாளி கோகுல்ராம் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு மீண்டும் வருமாறு அழைத்ததாக சொல்லப்படுகிறது. அந்தப்பெண் செல்ல மறுத்து கதறி அழுதுள்ளார். வராவிட்டால் வீடுபுகுந்து கொலை செய்துவிடுவதாக கடுமையாக மிரட்டியுள்ளான்

இதனால் பயந்து போன அந்த பெண் , வியாழக்கிழமை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகள் விரிவாக புகார் அளித்தார்.சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வனிதா மற்றும் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் இதில் தொடர்புடைய ரவுடி கட்டை முருகனையும், கோகுல்ராமையும் தேடிவந்த நிலையில் தாளமுத்துநகர் பகுதியில் ஒருவரை அரிவாளை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக தனது பைக்கில் தப்பிச்சென்ற ரவுடி கட்டை முருகன் சாலையில் சறுக்கி கீழே விழுந்ததில் அவருக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. குற்றவழக்கில் தொடர்புடையவராக இருந்தாலும் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மனித நேயத்துடன் மாவுக்கட்டு போட்டு விட்டதாக போலீசார் தெரிவித்தனர்

இதைத் தொடர்ந்து கட்டை முருகன் மற்றும் கோகுல்ராம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கட்டை முருகனின் கைகளில் கட்டையை வைத்து கட்டி , மாவுக்கட்டுப் போடப்பட்ட நிலையில் கூட்டாளியுடன் அவர் சிறையில் கம்பி எண்ணி வருகின்றார்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments