அப்பாகிட்ட போறோம்… தாயுடன் உயிரை மாய்த்த விபரீத மென்பொறியாளர்..! ரூ 1.5 லட்சம் சம்பளம் நம்பிக்கை இல்லை.!

0 3518
அப்பாகிட்ட போறோம்… தாயுடன் உயிரை மாய்த்த விபரீத மென்பொறியாளர்..! ரூ 1.5 லட்சம் சம்பளம் நம்பிக்கை இல்லை.!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய மென்பொறியாளர், தனது தாயுடன் உயிரை மாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது. அதீதபாசத்தால் தன்னம்பிக்கை இழந்த உயிர்களின் சோக முடிவு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் சிதம்பரம். இவருக்கு சுபா என்ற மனைவியும், முரளிபாரதி என்ற மகனும் இரு மகளும் இருந்தனர். இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.

வங்கியில் ஓய்வு பெற்று 10 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்த சிதம்பரம், கடந்த 30 தினங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பால் உயிர் இழந்தார்.வீட்டில் இவரது மனைவி சுபாவும், அவரது மகன் முரளி பாரதியும் மட்டும் இருந்து வந்தனர்.

முரளி பாரதி மென்பொறியாளர் என்பதால் வீட்டில் இருந்தே பணி செய்து வந்தார். சிதம்ரம் உயிரிழந்த நாளில் இருந்தே கடந்த ஒரு மாத காலமாக தாய் மற்றும் மகன் இருவரும் யாரிடமும் பேசாமல் சோகத்தில் இருந்துள்ளனர்

சிதம்பரத்தின் 30வது நாள் நினைவு தினத்தை அனுசரித்துவிட்டு மிகுந்த மன வேதனையில் வீட்டில் இருந்த சுபாவும், மென்பொறியாளர் முரளி பாரதியும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் டவுன் போலீசார் வாயில் நுரைதள்ளிய நிலையில் கிடந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

"அப்பாவை தேடிச் செல்கிறோம் யாரும் கவலைபட வேண்டாம் மகிழ்ச்சியுடன் வாழ்க" என்று தனது மகள்களுக்கு தற்கொலை கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு இந்த விபரீத முடிவை மேற் கொண்டது தெரியவந்தது

தாய் மகன் இருவரும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தனித் தனியே எழுதி வைத்திருந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்த மென்பொறியாளர் முரளி பாரதி தந்தை மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் தன்னம்பிக்கை இழந்து இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறுவயது முதலே தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கையை கற்றுக் கொடுப்பதோடு, நெருக்கடியான சூழலை எப்படி எதிர் கொள்வது என்ற பக்குவத்தையும் சொல்லிக் கொடுக்க தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments