இந்தியா - வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்தியாவின் வளர்ச்சிக்கும், வர்த்தக மேம்பாட்டிற்கு வங்கதேசம் சிறந்த கூட்டாளியாக திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
4 நாட்கள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி ஷேக் ஹசீனாவை வரவேற்றதை அடுத்து முப்படை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
பின்னர், ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி - வங்கதேச பிரதமர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக இணைந்து வங்கதேசத்தின் 5 புள்ளி 13 கிலோ மீட்டர் நீள ரூப்ஷா ரயில் பாலத்தை திறந்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி - வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
வங்கதேசத்திற்கும், இந்தியாவின் அசாம் மாநிலத்திற்கும் பயனளிக்கும் வகையில் குஷியாரா நதியின் இடைக்கால நீர் பகிர்வு சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, கடந்த சில ஆண்டுகளாக வங்கதேசத்துடனான பரஸ்பர ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளதாகவும், ஷேக் ஹசீனாவுடன் பல்வேறு இருதரப்பு, பிராந்திய, உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
54 ஆறுகள் இந்தியா -வங்கதேச எல்லை வழியாக பாய்ந்து இரு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், குஷியாரா ஆறு குறித்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிரதமர் கூறினார்.
இதனையடுத்து பேசிய வங்கதேச பிரதமர், இரு நாடுகளுக்கு இடையிலான டீஸ்டா நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என நம்புவதாக குறிப்பிட்டார்.
Comments