ராணுவ முகாமுக்குள் ஊடுருவல்.. தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்.. 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்..!

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி பகுதியில் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். ராணுவ முகாமுக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை, இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை ராஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் இருக்கும் ராணுவ முகாமுக்குள் 2 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்கள் முகாம் வேலியைக் கடக்க முயல்வதைக் கண்டதும் வீரர்கள் உஷார் படுத்தப்பட்டு அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அப்போது தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்ட நிலையில், ராணுவ வீரர்கள் 2 தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலின் போது 3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இது தற்கொலைப்படை தாக்குதல் எனவும் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களால் திட்டம் முறியடிக்கப்பட்டது எனவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இருப்பதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரவாதிகளிடம் இருந்து பெரிய அளவிலான ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
புட்காமில் ராகுல் பட், அம்ரீன் பட் ஆகியோரை கொன்றதில் தொடர்புடைய தீவிரவாதி உட்பட 3 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நாளைக்கு பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments