பாழடைந்த வீட்டில் கல்வீசும்'சந்திரமுகி' திகிலில் கடலூர்..! துப்பறிந்த போலீஸ் எச்சரிக்கை

0 13469
பாழடைந்த வீட்டில் கல்வீசும்'சந்திரமுகி' திகிலில் கடலூர்..! துப்பறிந்த போலீஸ் எச்சரிக்கை

கடலூர் முதுநகரில் பாழடைந்த வீட்டில் இருந்து கற்கள் வந்து விழுவதாக கூறி மக்கள் அச்சத்தில் தூக்கத்தை தொலைத்த நிலையில், பாம்புகளுக்கு அஞ்சிய பெண் ஒருவர் சந்திரமுகி பாணியில் செய்த பூச்சாண்டி அம்பலமாகி உள்ளது.

கடலூர் முதுநகரில் உள்ள பென்ஷன் லைன் தெருவில் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவின் மையப்பகுதியில் ஒரு பாழடைந்த பங்களா உள்ளது. இந்த பங்களாவின் உரிமையாளர் சென்னையில் வசித்து வரும் நிலையில் மிகப்பெரிய தோட்டத்துடன் கூடிய பங்களாவில் ஒரு கார் மட்டுமே நிற்கின்றது. இந்த வீட்டின் உரிமையாளர் இந்த பகுதிக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பங்களாவில் இருந்து சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகள் மீது கல் வந்து விழுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். இரவு பகல் பாராமல் உள்ளிருந்து கல் வந்து வெளியில் விழுந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இதில் ஏதோ மர்மம் இருக்குமா என காவல்துறையுடன் சேர்ந்து வீட்டிற்குள் சென்று சோதனையும் மேற்கொண்டனர் ஆனால் அந்த கட்டிடத்திற்குள் யாருமே இல்லை வீடும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. ஆனால் கல் வந்து விழுவது மட்டும் தொடர்கதையாக நடந்து வருகின்றது.

இந்த நிலையில் வெளியிலிருந்தவர்கள் கல்லை உள்ளே போட்டாலும் அந்த கல் வெளியில் வந்து விழுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தாங்கள் எறியும் கல்லில் அடையாளம் வைத்தும் அவர்கள் வீசிய நிலையில் சற்று நேரத்தில் அந்த கல் அவர்கள் எங்கிருந்து வீசினார்களோ அங்கேயே வந்து விழுந்ததால் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

காவல்துறையினர் இந்த பகுதியில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் காவல்துறையினர் நிற்கும் போதே கல் வந்து விழுந்ததால் அவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஏதாவது தீயசக்தியின் சேட்டையாக இருக்கும் என்று இந்துக்கள் வீட்டு வாசலில் மஞ்சள் குங்குமத்தை பூசியும், கிறிஸ்தவர்கள் சிலுவை வரைந்தும் இரவு பகலாக கண்விழித்து தூக்கம் தொலைத்து தவித்து வருவதாக தெரிவித்தனர்

அந்த பாழடைந்த பங்களாவில் பேய், பிசாசு என்று ஆளுக்கொரு கதை கட்டிய நிலையில் போலீசாரின் ரகசிய விசாரணையில் கல்வீசிய கேடி லேடியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த பங்களாவின் அருகே வசிக்கின்ற அந்த பெண்ணின் வீட்டிற்கு பாழடைந்து புதர்மண்டி கிடக்கும் பகுதிகளில் இருந்து பெரிய அளவிலான பாம்புகள் வருவது வாடிக்கையாகி உள்ளது.

எனவே அந்த வீட்டின் புதரை அகற்ற வைக்கும் திட்டத்தில் அந்த பெண் தனது வீட்டில் இருந்து அக்கம் பக்கத்து வீட்டிற்கும், போலீசார் மீதும் கல்லை தூக்கிவீசிவிட்டு, பங்களாவில் இருந்து வருவதாக புரளியை கிளப்பி விட்டது தெரியவந்துள்ளது.

வதந்தியை பரப்பி, பிறரை அச்சுறுத்தி பீதிக்குள்ளாக்குவது தண்டனைக்குரிய குற்றம் என்பதை சுட்டிக்காட்டி உள்ள போலீசார், அந்த இளம் பெண் கல்வீசி சந்திரமுகி விளையாட்டு காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்து உள்ளனர்.

அதே நேரத்தில் அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி போலீசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் இந்த நிஜ சந்திரமுகிக்கு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments