அந்த 5 பெண்கள் காணா பிணமாக்கிய சீரியல் கில்லர் கைது..! நிஜ மன்மதன் போலீசில் சிக்கியது எப்படி.?

0 4419

ஐந்து பெண்களை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசிய சீரியல் கில்லரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 9 தனிப்படைகள் அமைத்து 2 மாத தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆயத்த ஆடையகத்தில் பணிபுரிந்து வந்த கொடூர கொலையாளியை போலீசார் அதிரடியாக சுற்றிவளைத்தனர்.

கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி மைசூர் அடுத்த மாண்டியாவில் கால்வாய் ஒன்றில் உடல் துண்டிக்கப்பட்ட 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். அங்கிருந்து சரியாக 25 கிலோ மீட்டரில் உள்ள அரக்கேரே என்ற கிராமத்தில் உள்ள கால்வாயிலும் ஒரு பெண்ணின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது..!

இவர்கள் யார் ? எதற்காக கொல்லப்பட்டார்கள் ? கொலையாளிகள் யார் ? என்பதைக் கண்டறிய 45 காவலர்களை உள்ளடக்கிய 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டது. சடலங்கள் கிடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்போன் சிக்னல்களை வைத்து விசாரணையை முன்னெடுத்தனர் போலீசார்..!

கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களில் மாயமாகி கண்டுபிடிக்க இயலாத பெண்கள் 1,116 பேர். அவர்களில் 2 பேர் தான் இப்படி உடல் துண்டாக்கி கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகித்தனர். மே மாதம் இதே பாணியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததால் கொலை எண்ணிக்கை 3 ஆனது. அடுத்த பெண்ணை கொலை செய்வதற்கு முன்பாக கொடூர கொலையாளியை பிடிக்க வேண்டும் என்று போலீசார் வேகம் காட்டினர்.

சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்போன் சிக்னல்களை தொழில் நுட்ப ரீதியாக ஆய்வு செய்த போது, சம்பவத்தன்று குறிப்பிட்ட செல்போனின் சிக்னல் மைசூரில் இருந்து மாண்டியாவுக்கு நகர்ந்து பின்னர் மீண்டும் அது அங்கிருந்து மைசூரு சென்றதை கண்டுபிடித்தனர்.

அந்த செல்போனுக்கு சொந்தக்காரரான பெங்களூரு ஆயத்த ஆடையகம் தயாரிக்கும் நிறுவன ஊழியர் சித்தலிங்கப்பா என்பவரை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

பெண்களிடம் நெருங்கிப்பழகும் குணம் கொண்ட சித்தலிங்கப்பா அவர்களுடன் உல்லாசமாக சுற்றுவது வழக்கம், அந்தவகையில் சாம்ராஜ் நகரை சேர்ந்த பாலியல் தொழிலாளியான சந்திரகலாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. தான் பாலியல் தொழிலில் தள்ளப்பட காரணமான இருந்த பெண்கள் குறித்து சந்திர கலா தெரிவிக்க அவர்களை ஒவ்வொருவராக கொலை செய்ய திட்டம் வகுத்துள்ளனர்.

இதற்காக சித்தலிங்கப்பாவுக்கு மைசூரில் வீடு ஒன்றை வாடகைக்கு பார்த்து கொடுத்துள்ளார் சந்திரகலா. தங்கள் திட்டப்படி சம்பந்தப்பட்ட பெண்களை சித்தலிங்கப்பாவுக்கு அறிமுகப்படுத்தி விட்டுள்ளார். அவர்களும் பலமுறை அந்த வீட்டிற்கு வந்து சித்தலிங்கப்பாவை தனிமையில் சந்தித்து சென்றுள்ளனர்.

இதில் பெங்களூரை சேர்ந்த பெண்ணை மே மாதம் கொலை செய்து துண்டு துண்டாக்கி வீசிய சித்தலிங்கப்பா, சந்திரகலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு பெண்ணை 2 வதாக கொலை செய்து துண்டுகளாக்கி மாண்டியாவில் வீசி உள்ளான்.

கொல்லப்பட்டவர்களின் உடல் பாகங்களை துண்டுகளாக்கி மூட்டை கட்டி தனது மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச் சென்று பல்வேறு இடங்களில் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இரு கொலைகளுக்கும் சந்திரகலா அவனுக்கு உதவி உள்ளார். போலீசில் காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்று சந்திரகலாவையும் கொலை செய்து துண்டுகளாக்க திட்டமிட்ட சித்தலிங்கப்பா, அன்றைய தினமே போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

சீரியல் கில்லர் சித்தலிங்கப்பா இதுவரை 5 பெண்களை கொலை செய்திருப்பதாக தெரிவித்துள்ள போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், 2 மாதங்கள் திறமையாக துப்பு துலக்கி இந்த விபரீதக் கொலையாளியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆட்டோ சங்கர் போல கொலைகளைத் தொடர்ச்சியாக செய்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments