பல்துறை வித்தகர் கலைஞர்.. தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு இன்று நான்காம் ஆண்டு நினைவுநாள்.!

0 1358

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு இன்று நான்காம் ஆண்டு நினைவுநாள். பல்துறை வித்தகரான கலைஞரை நினைவுகூரும் ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்...

கலைஞரின் அனல்பறக்கும் வசனங்களில் ஒன்றுதான் இது. பராசக்தி திரைப்படத்தில் தொடங்கிய கலைஞரின் கலைப்பயணம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.

மறக்க முடியுமா, மனோகரா, அரசிளங்குமரி, ரங்கூன் ராதா, மலைக்கள்ளன் போன்ற படங்களின் வசனங்கள் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவை. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் தொடங்கி பிற்காலத்தில் வந்த நடிகர்-நடிகைகள் வரை ஏராளமானோர் கலைஞரின் வசனங்களை பேசி நடித்துள்ளனர்.

1950களில் ஆட்சியில் இருந்த காங்கிரசை வீழ்த்தவும், தி.மு.க.வை மாபெரும் கட்சியாக வளர்க்கவும் பெருமுயற்சி மேற்கொண்ட கலைஞர், அண்ணா மறைவுக்குப் பின் கட்சித் தலைவராகத் தேர்வானார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. தொண்டர்களை வழிநடத்திய கலைஞர், இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி போன்ற திராவிடக் கொள்கைகளில் வாழ்நாள் முழுவதும் உறுதியாக இருந்தார்.

எழுத்தாளர், பத்திரிக்கையாளர், இலக்கியவாதி, திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முக வித்தகராகத் திகழ்ந்த கலைஞர் முத்தமிழ் அறிஞராகப் போற்றப்பட்டார்.

இலக்கணம், இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் ஏராளமான நூல்களை எழுதிய அவர், கட்சித் தொண்டர்களுக்காக ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும், கடிதங்களையும் எழுதியுள்ளார். தமது கணீர்ப் பேச்சால் லட்சக்கணக்கான மக்களை தம்வயப்படுத்தியவர் கலைஞர்.

50 ஆண்டுகள் கட்சித் தலைவர், 5 முறை முதலமைச்சர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர்.... இப்படி பல பொறுப்புகளை வகித்தபோதும் எழுத்துப்பணியை விடவே இல்லை.

தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும், மாநில நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார் கலைஞர். அன்று முதல் இன்று வரை லட்சக்கணக்கான மக்கள் இத்திட்டங்களால் பயன்பெற்று வருகின்றனர்.

அவரது நீண்ட, நெடிய பயணம் நான்காண்டுகளுக்கு முன் இதே நாளில் நிறைவுபெற்றாலும், தமிழக மக்களால் என்றென்றும் பேசப்படும் தலைவராக விளங்குகிறார் கலைஞர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments