15 வயது சிறுவனை ஜெயிலுக்கு அனுப்பி வைத்த ‘ஹோம் மேக்கர்’ தாய் ..! விசாரித்த போலீஸ் அதிர்ச்சி..!

0 6178

பழனி அருகே சொத்துக்களை தன் பெயருக்கு எழுதிக்கேட்டு அடம் பிடித்த கணவனை உறவினர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த பெண் ஒருவர் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக 10 ஆம் வகுப்பு படித்து வந்த மகனை கொலை பழியுடன் சரணடையவைத்த சம்பவம் 5 மாதம் கழித்து அம்பலமாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஓமந்தூரார்... இவரது மனைவி பாண்டீஸ்வரி.. தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த இவர்களது 15 வயது மகன் தனது தந்தையை கொலை செய்துவிட்டதாக கூறி , கடந்த பிப்ரவரி மாதம் 27 ந்தேதி கையில் கிரிக்கெட் மட்டையுடன் சரண் அடைந்தான்.

குடும்ப தகராறில் தாயை அடித்த தந்தையை ஆத்திரத்தில் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலமும் அளித்திருந்தான். அவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ஓமத்தூராரின் தந்தை ரெங்கசாமி என்பவர் தனது மகன் கொலை சம்பவத்தில் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த புகாரை அடிப்படையாக கொண்டு போலீசார் 4 மாதங்கள் கழித்த நிலையில் மறுவிசாரணை நடத்தினர்.

இதில் குடும்பமே சேர்ந்து ஓமந்தூராரை கடுமையாக தாக்கி கொலை செய்த சம்பவம் அம்பலமானது. ஓமந்தூராரின் மனைவி பாண்டீஸ்வரி பெயரில் சத்திரப்பட்டி மற்றும் பழனியில் சொந்த வீடு இருப்பதாக கூறப்படுகின்றது. மதுவுக்கு அடிமையான ஓமந்தூரார் அந்த இரு வீட்டையும் தனது பெயருக்கு மாற்றித்தரும்படி அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

சம்பவத்தன்று பாண்டீஸ்வரியின் உறவினர்கள் தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையில் ஓமந்தூரர் மீண்டும் தகராறு செய்ததோடு, பாண்டீஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகின்றது. அப்போது அங்கிருந்த கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகியோருடன் சேர்ந்து பாண்டீஸ்வரியும், அவரது 15 வயது மகனும் ஓமந்தூராரை சரமாரியாக தாக்கி உள்ளனர். கிரிக்கெட் மட்டையை எடுத்து தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து சிறுவன் என்பதால் கொலை வழக்கில் தண்டனை குறைவு என்பதை அறிந்து தனது மகன் படிப்பு கெட்டாலும் பரவாயில்லை என்று அவனை மட்டும் கொலை வழக்கில் சிக்க வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாண்டீஸ்வரி, கிருஷ்ணவேனி, லட்சுமி, ராமையா ஆகிய 4 பேரையும் கொலை வழக்கில் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தான் சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை, தன் மகன் படித்து நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற தாய்மார்களுக்கு மத்தியில் கணவனை கொலை செய்த கையோடு, மகனை சிறைக்கு அனுப்பிவிட்டு தனது பெயரில் உள்ள வீட்டை பத்திரமாக பார்த்துக் கொண்ட பெண், அந்த வீடுகளை பிரிந்து சிறையில் கம்பி எண்ணி வருவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments