இலங்கையில் அவசர நிலை.. பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

0 1057
இலங்கையில் அவசர நிலை.. பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இல்லத்தை முற்றுகையிட்டுப் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையைப் பொதுமக்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்று ராணுவத்தினரிடம் கோத்தபய தஞ்சமடைந்தார். இன்று பதவி விலகுவதாக முன்னரே அறிவித்த கோத்தபய தனது குடும்பத்தினருடன் ராணுவ விமானத்தில் ஏறி மாலத் தீவுக்குத் தப்பிச் சென்றார்.

பொருளாதார நெருக்கடியால் ஆட்சியாளர்கள் மீது கடுஞ்சினத்தில் உள்ள பொதுமக்கள் கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க இல்லம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். 

பிரதமர் இல்லத்தைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பிரதமர் இல்லத்தின் முன் திரண்ட பொதுமக்கள் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். 

காவலை மீறிப் பொதுமக்கள் பிரதமர் இல்லத்துக்குள் நுழைய முயன்றபோது படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்ததுடன் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வெடிக்கச் செய்தனர். 

இலங்கை அரசமைப்புச் சட்டப்படி அதிபர் பதவி விலகினால், பிரதமர் அதிபராகச் செயல்படுவார். இந்நிலையில் பிரதமரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்துவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் படையினரின் எதிர்ப்பையும் மீறிப் பிரதமர் இல்லத்தின் மதில்சுவர் ஏறிப் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தனர். 

காவல் படையினரால் தாக்கப்பட்டோருக்குப் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். பிரதமருக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்துள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினர் வான்வழிக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வெடிக்கச் செய்த போதிலும் போராட்டக் காரர்கள் பிரதமர் இல்லத்தை நோக்கித் தொடர்ந்து முன்னேறிச் சென்றனர்.

பாதுகாப்புப் படையினரின் எதிர்ப்பை மீறித் தடுப்புகளை உடைத்துக் கொண்டு பிரதமர் இல்லத்துக்குள் நுழைந்த பொதுமக்கள் அந்தக் கட்டடத்தின் உச்சியில் கொடியேற்றினர். பிரதமர் அலுவலகம் இல்லம் இணைந்த அந்தக் கட்டடம் முழுவதும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

 

அதிபரின் பதவி விலகல் கடிதம் இன்றைக்குள் வந்து சேரும் என்றும், புதிய அதிபர் தேர்தல் ஜூலை 20ஆம் நாள் நடைபெறும் என்றும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments