கையை உடைத்த கணவனின் கழுத்தை அறுத்த ஆவேச அமுதா..! மகனை தாக்கியதால் ஆத்திரம்..!

0 1597
கையை உடைத்த கணவனின் கழுத்தை அறுத்த ஆவேச அமுதா..! மகனை தாக்கியதால் ஆத்திரம்..!

மயிலாடுதுறை அருகே கணவனை வெட்டி கொலை செய்ததாக பெண் ஒருவர் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் நிலையத்திற்கு 36 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கையில் அரிவாளுடன் தனது மகனை அழைத்து வந்திருந்தார்.

சற்று ஆவேசமாக காணப்பட்ட அந்த பெண், குடித்துவிட்டு தினமும் தன்னையும், மகனையும் அடித்து துன்புறுத்தி வந்த கணவனை வெட்டி கொலை செய்து விட்டதாகவும், சரண் அடைய வந்திருப்பதாக கூறி போலீசாரை அதிர வைத்தார்.

போலீஸ் விசாரணையில் போதையால் குடும்பத்தை படாத பாடு படுத்திவந்த மகாதேவனின் அட்டகாசம் அம்பலமானது. மயிலாடுதுறை மாவட்டம் மணல் மேடு அடுத்த கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி அமுதா.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதும் மனைவியை அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் குடிக்க பணம் தர மறுத்த மனைவியின் வலது கையை உடைத்துள்ளார்.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு மனைவியிடம் 500 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு குடித்துவிட்டு இரண்டு பீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த மகாதேவன், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தாயை அடிப்பதை பார்த்து மூத்த மகன் ராஜராஜ சோழன் அம்மாவை ஏன் அடிக்கிறாய்? என்று தட்டிக் கேட்டதற்கு பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் கிழித்துள்ளார். மகனை காப்பாற்ற வந்த மனைவியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார் மகாதேவன்.

இதையடுத்து ஆவேசமான மனைவி அமுதா அரிவாளை பிடுங்கிய வேகத்தில் கணவனை கழுத்தில் சராமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மகாதேவன் உயிரிழந்தார்.

பின்னர் தன் வீட்டை பூட்டிவிட்டு மணல்மேடு காவல் நிலையத்திற்கு சென்று கணவனை கொன்று விட்டதாக மகனுடன் சரணடைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மகாதேவனின் சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அமுதாவை கைது செய்தனர். காயமடைந்த அவரது மகனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

குடி குடியை கெடுக்கும் என்பதற்கு மற்றும் ஒரு சோக சாட்சியாகி இருக்கின்றது இந்த ஆவேச கொலை சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments