மதுரவாயல் பைபாசில் கைகாட்டி மறித்த பெண்.. கலாசலா களவாணி கும்பல்.. ஓட்டுனர்களே உஷார்.!
மதுரவாயல் பைபாசில் லிஃப்ட் கேட்பது போல் நடித்து களவாணி கும்பலுடன் சேர்ந்து கழுத்தில் கத்திவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணை வாகன ஓட்டுனர்கள் போலீஸ் உதவியுடன் மடக்கிப்பிடித்தனர்.
மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் வானகரம் டோல்கேட் அருகே பெண் ஒருவர் சனிக்கிழமை நள்ளிரவு ஒரு மணி அளவில் அந்த வழியாக சென்ற கார் ஒன்றை கைகாட்டி மறித்து லிப்ட் கேட்டுள்ளார்.
பெண் ஒருவர் தனியாக லிப்ட் கேட்டதை கண்ட கார் ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டு, உதவி செய்யும் நோக்கத்தில் அந்த பெண்ணை காருக்குள் அமர வைத்துள்ளார். பின்பு காரை எடுக்க முயன்ற போது கண்ணிமைக்கும் நேரத்தில் அருகே ஒளிந்து இருந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் விரைந்து வந்து காருக்குள் ஏறி, கார் ஓட்டுனரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளது.
அவரிடம் இருந்து 2000 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். அந்த வழியாக சென்ற சக வாகன ஓட்டிகள் இதனை கண்டு ரோந்து போலீசாரை அங்கு அழைத்து வந்ததும், சைரன் சத்தம் கேட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது. ஆனால் காருக்குள் இருந்த பெண் சிக்கிக் கொண்டார்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை செய்ததில் அவர், சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த சாந்தி என்பதும், அவரை, வானகரம் டோல்கேட் அருகே நள்ளிரவில் பைபாஸ் சாலையில் செல்லும் கார்களில் தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து கைகாட்டி நிறுத்தி வழிப்பறி செய்து வந்ததும் தெரியவந்தது.
தப்பி ஓடிய வழிப்பறி கொள்ளையர்களை போரூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் பைபாஸில் நின்று கைகாட்டி வாகனத்தை மறிக்கும் பெண்களிடம் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Comments