கர்ணனான காங்கிரஸ் எம்.எல்.ஏ, கலங்கடித்த கல்லூரி மாணவி..! 1000 ரூபாயை வாங்க மறுத்தார்.!

0 8408
கர்ணனான காங்கிரஸ் எம்.எல்.ஏ, கலங்கடித்த கல்லூரி மாணவி..! 1000 ரூபாயை வாங்க மறுத்தார்.!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு கல்லுரியில், தனது படத்தை வரைந்து கொடுத்த  மாணவிக்கு, எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ், 1000 ரூபாயை அன்பளிப்பாக கொடுத்த நிலையில்  அதனை வாங்க மறுத்து மாணவி அழுது புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.கே ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்லூரி கட்டடம் அடிக்கல் நாட்டு விழா ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் நடந்தது.

இந்த விழாவின் போது அக்கல்லூரியின் மாணவி மாரியம்மாள் என்பவர் சிறப்பு அழைப்பாளர்களை கவுரவிக்கும் விதமாக எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் அக்கல்லூரியின் கல்விக் கழக தலைவர் பெ.மு.சுப்ரமணியம் ஆகியோரின் படத்தை பென்சிலால் வரைந்து அவர்களிடமே பரிசாக வழங்கினார்.

அதனைப் பெற்றுக் கொண்ட கல்லூரியின் கல்விகழக தலைவர் பெ.மு. சுப்பிரமணியம் அந்த மாணவியை முதுகில் தட்டிக் கொடுத்து வாழ்த்தினார். அதனை அந்த மாணவி பெருமையுடன் ஏற்றுக் கொண்டார்.

எங்கு சென்றாலும் பவர்ஸ்டார் பாணியில் பணத்தை அள்ளிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜோ, வழக்கம் போல அந்த மாணவிக்கும் ஆயிரம் ரூபாயை அன்பளிப்பாக அள்ளிக் கொடுத்தார். இதனைக்கண்ட மாணவி மாரியம்மாளோ "ஐயோ எனக்கு இந்த பணம் வேண்டவே வேண்டாம்" என்று பிடிவாதமாகக் கூறி மறுத்தார்.

நான் பாசத்துடன் வரைந்து கொடுத்த இந்த ஓவியத்திற்கு எம்எல்ஏ பணம் கொடுக்கிறாரே என ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இதனால் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவியின் அருகே வந்து பணத்தை வாங்கும்படி அறிவுறுத்த, மாணவி மாரியம்மாளோ தயவு செய்து இந்த பணமே எனக்கு வேண்டாம் என கண்ணீருடன் பிடிவாதமாகக் கூறிவிட்டார்.

பின்னர் அம்மாணவிக்கு கொடுக்கவிருந்த பணத்தை எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் அக்கல்லூரியின் முதல்வர் சின்னதாயிடம் கொடுத்துவிட்டு, அம்மாணவியை சமாதானப்படுத்தும் நோக்கில் அம்மாணவிக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட அம்மாணவிக்கு அங்கு நின்று கொண்டிருந்த பேராசிரியர்கள் குடிக்க தண்ணீர் கொடுத்து அசுவாசப்படுத்தினர்.

கடந்த சட்டமன்ற தேர்தல் காலத்தில் இருந்து தொகுதி வாசிகளுக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரத்தை உடைய காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜிடம், முதல் முறையாக அரசு கல்லூரி மாணவி ஒருவர், பணம் வாங்க மறுத்து பணமே எல்லாவற்றுக்கும் பிரதானமல்ல என்று நிரூபித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments