வெடி ஆலையில் விபத்து.. தொழிலாளர்கள் 4பேர் பலி; 8 பேர் படுகாயம்

0 2243

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் நேர்ந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். காயமடைந்த
8 பேருக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவான ஆலை உரிமையாளரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே களத்தூரில் வழிவிடு முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து நேர்ந்தது. வெடிமருந்து தயாரிக்கும் பணியின் போது தீப்பற்றி வெடிவிபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பட்டாசு தயாரிக்கும் அறைகளில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் 7 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின.

தகவல் அறிந்து சிவகாசியில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயைக் கட்டுப்படுத்தியதுடன், கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்டனர்.

 இந்த வெடிவிபத்தில் முருகேசன், குமார், செல்வம், பெரியசாமி ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். கோபாலகிருஷ்ணன், முனியாண்டி, காளியப்பன், அழகர்சாமி உட்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தோரில் கோபாலகிருஷ்ணனின் 8 வயது மகன் மனோ அரவிந்தும் ஒருவர். விடுமுறை நாளில் தாய்தந்தையுடன் அவர் பட்டாசு ஆலைக்குச் சென்றபோது விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகரன் நிகழ்விடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். புத்தாண்டு நாளில் தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்காமல் உற்பத்தியில் ஈடுபட்ட நிலையில் வெடிவிபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உரிய பாதுகாப்பு இன்றி ஆலையை இயக்கியதாக உரிமையாளர் வழிவிடு முருகன் மீது வழக்குப் பதிந்துள்ள நத்தம்பட்டி காவல்துறையினர், அவரைத் தேடி வருகின்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோரில் கோபாலகிருஷ்ணன், அவர் மகனான சிறுவன் மனோஅரவிந்த், வேல்முருகன், முனியாண்டி ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விதிமீறலில் ஈடுபட்டு விபத்து ஏற்படுத்தியதாக பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தும்,  ஆலையை மூட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments