காவல் நிலையத்துக்குள் "சைலண்ட்டாக" நுழைந்த டிஜிபி சைலேந்திரபாபு.. பரபரப்புக்குள்ளான காவலர்களின் சிசிடிவி காட்சிகள்.!
கோயம்புத்தூர் கோவில்பாளையம் காவல் நிலையத்துக்கு திடீர் விசிட் அடித்த டிஜிபி சைலேந்திரபாபுவால் பணியிலிருந்த போலீசார் பரபரப்புக்கு உள்ளாகினர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை கோயம்புத்தூர் சென்றிருந்த டி.ஜி.பி சைலேந்திரபாபு, ஈரோடு செல்லும் வழியில் கோவில்பாளையம் காவல் நிலையம் முன்பு திடீரென வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
வாகனத்தை விட்டு இறங்கிய அவர் விறுவிறுவென காவல் நிலையத்துக்குள் நுழைந்தார். உள்ளே காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் உள்ளிட்டோர் ஆரவாரமின்றி தங்களது பணிகளை இயல்பாக செய்து கொண்டிருந்தனர். டிஜிபியின் திடீர் வருகையை எதிர்பார்க்காத அவர்கள், அவரைக் கண்டதும் பரபரப்புக்கு உள்ளாகினர்.
நிலுவையில் உள்ள வழக்குகள், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விவரம் உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்களை கேட்டுப் பெற்று ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திரபாபு, பின்னர் துறைரீதியிலான அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு அங்கிருந்து விடைபெற்றார்.
Comments