கைவிலங்கை உடைத்து "கம்பி நீட்டிய" தம்பி: மீண்டும் "காப்பு" மாட்டிய போலீசார்!

0 3598
கைவிலங்கை உடைத்து "கம்பி நீட்டிய" தம்பி: மீண்டும் "காப்பு" மாட்டிய போலீசார்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திருட்டு வழக்கில் கைது செய்ய வந்த போலீசாரை தனது ஆதரவாளர்களை ஏவி தாக்கியதோடு, கைவிலங்கை துண்டித்துக் கொண்டு தப்பிய திருடன் கைது செய்யப்பட்டான். மனைவியை எம்.எல்.ஏவாக்க ஊர் ஊராக சென்று வீடு புகுந்து திருடிய லட்சிய கொள்ளையனை நம்பி ,போலீஸ் மீது கைவைத்து கம்பி எண்ணும் தம்பிகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு.

கடற்கரையில் பலவிதமாக வித்தை காட்டும் இந்த நபர்தான், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி சுவிதாவின் கணவர் கணேஷ்.

கடந்த 6ஆம் தேதி கொள்ளை வழக்கு தொடர்பாக, கோவை குனியமுத்தூர் போலீசார் வீடு புகுந்து கணேஷை கைது செய்தனர். அவனை காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டபோது கணேஷின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு, காரை மறித்து வாக்குவாதம் செய்தனர்.

தொடர்ந்து போலீசாரைத் தாக்கிவிட்டு, அருகிலிருந்த வெல்டிங் பட்டறைக்கு கணேஷை அழைத்துச் சென்று கைவிலங்கையும் வெட்டி எடுத்துவிட்டு, அவனை தப்பிக்கவைத்தனர்.

கணேஷின் அடியாட்களால் காயமடைந்த போலீசார் உமராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசாரை பொது இடத்தில் தாக்கியதாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட உமராபாத் காவல்துறையினர், அன்றைய தினமே 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கணேஷின் கையில் இருந்த விலங்கை உடைத்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் சுரேஷும் கைது செய்யப்பட்டான். தலைமறைவான கணேசன் மற்றும் அவனது மனைவி உள்ளிட்டோர் தேடப்பட்டு வந்த நிலையில், கணேஷ் மட்டும் மிட்டாளம் பகுதியில் மலையடிவாரத்தில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டான்.

சம்பவத்தன்று தன்னை ரொம்ப நல்லவன் என்று காட்டிக் கொள்வதற்காக மீடியாக்கள் முன்பு முதலை கண்ணீர் வடித்தபடி பேட்டியளித்தான் கணேஷ்.

கணேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவன் மீதுள்ள வழக்குகளின் பட்டியலை போலீசார் வெளியிட்டுள்ளனர். புதுச்சேரி,காரைக்கால் , ஆந்திரா, கர்நாடகா, தூத்துக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் வீட்டில் தனியாக இருப்பவர்களை ஏமாற்றி நகைகளை கொள்ளையடிக்கும் உஷார் கொள்ளையன் கணேஷ், சொந்த ஊரில் மக்களுக்கு பல்வேறு உதவி செய்து மக்களிடையே சமூக ஆர்வலர் என்ற போர்வையில் உலாவி வந்துள்ளான்.

2014 ஆம் ஆண்டு கொள்ளை வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்ட போது, தனது மனைவியை எம்எல்ஏவாக ஆக்க வேண்டுமென ஆசைப்பட்டு அதற்கு பணம் அதிகம் தேவைப்படும் என்பதால், வெளியூரில் சென்று கொள்ளை அடிப்பதாக கணேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளான். அதன் படியே கொள்ளையடித்த காசை கொட்டிக்கொடுத்து மனைவியை ஊராட்சி மன்ற தலைவியாக உயர்த்திய கணேஷ் தற்போது மீண்டும் போலீசார் வசம் சிக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

ஊர் ஊராகக் கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கணேஷை உள்ளூர் காவல்துறையினர் கண்காணிக்கத் தவறியதால் அவன் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்துள்ளான். உள்ளூர் மக்களும் அவனை பற்றிய உண்மை அறியாமல், கடை எட்டாவது வள்ளல் போல நினைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் கொள்ளைக்கார அண்ணனை காப்பாற்ற நினைத்து போலீசாருடன் மல்லுக்கட்டி, கைவிலங்கை உடைத்த பாசக்கார தம்பிகள் 10 பேர் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments