கனெக்ட் மாநாடு வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் - முதலமைச்சர்

0 1932

இந்திய தொழில் கூட்டமைப்பும், தமிழக அரசின் எல்காட் நிறுவனமும் இணைந்து நடத்தும் கனெக்ட் கருத்தரங்கை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூர்மையான அறிவுத்திறன் படைத்த  தமிழக இளைஞர்களுக்கு திறன் பயிற்சி கொடுத்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதியில் கனெக்ட் கருத்தரங்கை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தரவு மைய கொள்கையையும் வெளியிட்டார். அத்துடன், அரசின் மின் ஆளுமை நிறுவனம் - சென்னை கணிதத்துறை நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கருத்தரங்கில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், திமுக ஆட்சியில் தான் தகவல் தொழில்நுட்பத்திற்காக தனித்துறை உருவாக்கப்பட்டது என்றார். வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு இந்த கனெக்ட் மாநாடு வழிவகுக்க வேண்டும் எனக் கூறிய முதலமைச்சர், கூர்மையான அறிவுத்திறன் படைத்த தமிழக இளைஞர்களுக்கு கூடுதலாக திறன் பயிற்சி அளித்து ஐ.டி. நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஒரு மாநிலத்திற்கு முன்னேற்றத்தையும், முதலீடுகளையும் கொண்டுவருவதில் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னிலை வகிப்பதாகவும், அத்தகைய தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய முதலமைச்சர், தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தமிழக அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments