செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு: வீடுகள், விளைநிலங்கள் பாதிப்பு!

0 2143

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சவ்வாது மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கரையோரமுள்ள வீடுகள், விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், சவ்வாது மலைப் பகுதியில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருவதால் செய்யாற்றில் வெள்ளம் பாய்ந்துகொண்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவிலும் கனமழை பெய்ததால் மலையடிவாரத்தில் உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து நள்ளிரவில் இரண்டாயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நீரும், நாமக்கல் ஓடை உள்ளிட்ட பல்வேறு ஓடைகளிலும் வரும் நீரும் சேர்ந்து செய்யாற்றில் கரைமீறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

செய்யாற்றில் கடந்த முப்பதாண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் செங்கத்தில் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளுக்குள் இரவே தண்ணீர் புகுந்தது.

காயிதே மில்லத் தெருவில் ஒரு வீட்டில் இருந்தவர்கள் மேல்தளத்தின் மீது ஏறிநின்று உயிர்தப்பினர். காலையில் வந்த தீயணைப்புத் துறையினர் அவர்களை ஏணிமூலம் கீழிறக்கிப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

 

செய்யாற்றின் இரு கரைகளிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்கள் நீரில் மூழ்கின. வெள்ளத்தின் வேகத்தில் இளம் வாழைக் கன்றுகள் முறிந்தும் சாய்ந்தும் சேதமடைந்தன. வெள்ளத்தில் சிக்கிய ஒரு மாடும் உயிரிழந்தது.

மூவாயிரம் கன அடிக்கும் கூடுதலாக ஆற்றில் வெள்ளம் பாய்வதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments