நீர்மூழ்கியில் ஆள் சென்று ஆழ்கடலில் ஆராய்ச்சி.. சமுத்திரயான் திட்டம் தொடக்கம்..!

0 2185
நீர்மூழ்கியில் ஆள் சென்று ஆழ்கடலில் ஆராய்ச்சி.. சமுத்திரயான் திட்டம் தொடக்கம்..!

நீர்மூழ்கிக் கலத்தில் ஆட்கள் ஆழ்கடலின் அடிக்குச் சென்று ஆராய்ச்சி செய்வதற்கான சமுத்திரயான் எனப்படும் திட்டத்தைச் சென்னையில் உள்ள தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் தொடக்கியுள்ளது.

8 சென்டிமீட்டர் தடிமன்கொண்ட டைட்டானிய உலோகத்தால், இரண்டு புள்ளி ஒரு மீட்டர் விட்டம் கொண்ட நீர்மூழ்கிக் கலம் செய்து கடலில் ஆயிரம் மீட்டர் முதல் ஆறாயிரம் மீட்டர் வரை ஆழமுள்ள பகுதிகளில் ஆராய்ந்து கனிம வளம், ஆற்றல் வளம் ஆகியவற்றைக் கண்டறிவதற்கான திட்டம் சமுத்திரயான் எனப்படுகிறது. கடலடி ஆராய்ச்சிக்குத் தயாரிக்கப்பட உள்ள நீர்மூழ்கிக் கலத்துக்கு மத்சய 6000 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மத்சய என்றால் தமிழில் மீன் எனப் பொருளாகும். முதலில் 500 மீட்டர் ஆழம் வரை சென்று ஆய்வு செய்யும் கலத்தைச் செய்து சோதிப்பது, 2024 டிசம்பருக்குள் ஆறாயிரம் மீட்டர் ஆழம் வரை சென்று ஆய்வு செய்வதற்கான கலத்தைத் தயாரித்து வெள்ளோட்டம் பார்ப்பது இதன் செயல்திட்டங்களில் அடங்கும்.

ஆழ்கடலில் 600 பார் அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டு 12 மணி நேரம் வரை ஆய்வு செய்யும் திறன் கொண்ட இந்தக் கலம், நெருக்கடிக் காலத்தில் மேலும் 96 மணி நேரம் கடலில் மூழ்கியிருக்கும் வசதியுள்ளது. புவி அறிவியல் அமைச்சகத்தால் ஐந்தாண்டுக்காலத்தில் நாலாயிரத்து 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான சமுத்திரயான் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் டைட்டானியம் உலோகத்தால் உருவாக்கப்படும் நீர்மூழ்கிக் கலம் தயாரிக்கும் செலவு மட்டும் 350 கோடி ரூபாயாகும். இந்தத் திட்டத்தைத் தொடங்கியதால் நீர்மூழ்கிக் கலம் மூலம் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்யும் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்சு, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments