தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் திறப்பு.!

0 9982

தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ள அரசு, திட்டமிட்டபடி நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை நாளை திறப்பது குறித்தும், அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

கல்வி நிலையங்களைப் பொறுத்தவரை நாளை முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்களுக்குச் செயல்படும் என்றும், 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படுகின்றன. பள்ளிகளில் மதிய உணவு திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு கல்வி நிலையங்கள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. போதிய இடைவெளியுடன் மாணவர்கள் அமர்வதற்கும் கல்வி நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பச் சோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் போதிய அளவு கிருமி நாசினி வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கேரள மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று பரவல் நிலையினைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திலிருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ, மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ளவேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments