சென்னையில் குப்பைக்குள் 9 கிலோ தங்கம்..! கடத்தல் கும்பல் சாயம் வெளுத்தது

0 21998
சென்னையில் குப்பைக்குள் 9 கிலோ தங்கம்..! கடத்தல் கும்பல் சாயம் வெளுத்தது

வெளிநாட்டில்  இருந்து  விமானம் மூலம்  கடத்திவந்த 9 கிலோ தங்கத்தை குப்பையில் மறைத்து சுங்கத்துறையின் கண்ணில் மண்ணைத்துவி வெளியில் ஏடுத்துச் சென்ற கடத்தல் கும்பல் போலீசில் சிக்கியுள்ளது. சென்னை விமான நிலையம் மூலம் கிலோ கணக்கில் தடையின்றி நடந்த தங்க கடத்தலின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. 

சென்னை குரோம்பேட்டையில் ஓபிராய் பிளைட் சர்வீஸ் (Oberoi flight service) என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விமான பயணிகளுக்கு உணவு சப்ளை செய்யும் கேட்ரிங் பணியை செய்து வருகிறது.

இதில் பணிபுரியும் சரவணன் என்பவர் கடந்த 23-ஆம் தேதி அதிகாலை பல்லாவரம் வழியாக வரும் போது இவரிடம் அணிந்திருந்த 2.5 சவரன் நகைகள், பணம், செல்போன் வழிப்பறி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து விமான நிலைய ஒப்பந்த ஊழியர்களான முகம்மது நசீர், பிரபுராம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் விமானம் மூலமாக கடத்தப்பட்டு வந்த ஒன்பது கிலோ தங்க கட்டிகளை அபகரிப்பதற்காக 3 பேரும் சேர்ந்து இந்த வழிப்பறி நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

கடந்த 23-ம் தேதி 9 கிலோ கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் இருந்து கொண்டு வந்த சரவணன், அதனை மர்ம கும்பல் வழிப்பறி செய்துவிட்டதாக கடத்தல் கும்பலை சேர்ந்த இம்ரான்கானிடம் தெரிவித்துள்ளார். பலமுறை கடத்தல் தங்கத்தை பத்திரமாக கொண்டு வந்த சரவணன் மீது இம்ரான்கானுக்கு சந்தேகம் எழவில்லை.

ஒன்பது கிலோ தங்கத்தை வழிபறி செய்துவிட்டார்கள் என புகார் அளித்தால் ஒட்டுமொத்தமாக போலீசில் சிக்கிக்கொள்வோம் என்பதால், சரவணன் அணிந்திருந்த இரண்டரை சவரன் செயின் மோதிரம், பணம், செல்போன் மற்றும் வழிபறி செய்யப்பட்டதாக சரவணன் போலியான புகாரை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வழிப்பறி நாடகமாடிய சரவணன், முகமது நசீர் மற்றும் பிரபுராம் ஆகிய மூவரையும் கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சுங்கத்துறை கண்காணிப்பில் சிக்காமல் எப்படி கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

சரவணன் விமான பயணிகளுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதால் விமான நிலையத்திற்குள் உணவு எடுத்துச் செல்லும் வாகனம் மூலம் அடிக்கடி சென்று வருவார். முகமது நசீர் மற்றும் பிரபுராம் இருவரும் விமானத்தில் குப்பை கழிவுகளை அகற்றும் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்தின் ஊழியர்கள். இவர்கள் இம்ரான்கான் போன்ற தங்க கடத்தல் கும்பலிடம் கமிஷனுக்கு வேலை பார்த்துள்ளனர்.

அதன்படி வெளிநாடுகளில் இருந்து பயணிகள் போர்வையில் தங்கத்தை கடத்தி வருபவர்கள் விமானத்தில் இருக்கையிலேயே தங்கத்தை மறைத்து வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு சுங்கத்துறை சோதனை நடத்தினாலும் கடத்தல் தங்கம் கிடைக்காது. விமானத்தை சுத்தம் செய்வதற்கு செய்யும் செல்லும் ஊழியர்களான நசீர், பிரபுராம் விமானத்தில் குப்பைகளை அகற்றுவது போல் எந்தெந்த இருக்கைக்கு பின்புறம் கடத்தல் தங்கம் இருக்கிறது என்று கடத்தல் கும்பல் கொடுக்ககும் குறிப்புகளை வைத்து தங்கத்தை குப்பையோடு சேர்த்து சேகரித்து விடுவார்கள். குப்பைகளை கொண்டு செல்லும் வண்டி மூலமாக கடத்தல் தங்கம் சுங்கத்துறை கண்ணில் சிக்காமல் வெளியில் வந்துவிடும். பின்னர் உணவு சப்ளை செய்யும் சரவணன் மூலம் கடத்தப்பட்ட தங்கம் கடத்தல் கும்பல் தலைவனுக்கு வந்து சேரும். இது போன்று பல முறை கோடிக்கணக்கில் மதிப்புடைய கடத்தல் தங்கம் கொண்டுவரப்பட்டு இருப்பது விசாரணையில் வெளியாகியுள்ளது.

வழக்கமாக சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் கடத்திவரப்பட்டாலும் மிகசொற்ப அளவிலான தங்கம் மட்டுமே கைப்பற்றப்பட்டு வந்த நிலையில் குப்பையோடு குப்பையாக கிலோ கணக்கில் தங்கம் வெளியே கடத்திச்செல்லப்பட்ட தகவல் சுங்கத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments