பிரதமரை விமர்சித்த யூடியூப்பர் குருஜி கைது..! சென்னையில் மாஸ் காட்டிய உ.பி. போலீஸ்

0 32153

சென்னை மாதவரத்தில் இருந்து கொண்டு உத்தரபிரதேச அரசு குறித்தும், பாரத பிரதமர் மோடி குறித்தும் விமர்சித்து யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு வந்த மன்மோகன் குருஜி என்பவரை உ.பி போலீசார் சென்னைக்கு வந்து கைது செய்து அழைத்துச்சென்றனர்.

சென்னை மாதவரம் கே.பி.ஆர் நகரில் சொந்த வீட்டில் வசித்து வருபவர், தன்னை தானே குருஜி என்று அழைத்துக் கொள்ளும் மன்கோகன் மிஷ்ரா.... இவர் மண்ணடி தம்புச்செட்டி தெருவில் பாரதசுவாமி மகான் சுதேசி என்கிற பெயரில் அறக்கட்டளை நடத்திவருகிறார்.

உத்திரபிரதேச மாநிலத்திலும் மடம் ஒன்றை நடத்திவரும் மன்மோகன், அடிக்கடி உத்தரபிரதேசம் சென்று வருவது வழக்கம்... மேலும் யூடியூப்பில் மன்மோகன்மிஸ்ரா என்ற பெயரில் தனது மனதுக்கு பட்டதை பேசி வீடியோவாக பதிவேற்றம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7 ந்தேதி கொரோனா காலத்தில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்தும், பாரத பிரதமர் மோடி குறித்தும் அவதூறான கருத்துக்களை ஹிந்தியில் பேசி அதனை வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார் இந்த குதர்க்க குருஜி.

இந்த யூடியூப் வீடியோவை உத்தரபிரதேசத்தில் உள்ள மடத்தில் உள்ளவர்கள் பகிர, குருஜியின் பேச்சில் அவதூறு இருப்பதாக சுட்டிக்காட்டி அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள பாஜக பிரமுகர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மன்மோகன் வீடியோ பதிவேற்றம் செய்த கணினி ஐபி முகவரியை வைத்து அவரது வீட்டை கண்டுபிடித்த உ.பி போலீசார் சென்னை வந்து தமிழக டிஜிபியை சந்தித்து விவரத்தை தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக மன்மோகனின் வீட்டுக்கு சென்ற உ.பி போலீசார் குதர்க்கமாக பேசி வீடியோ வெளியிட்ட குருஜியை தட்டித்தூக்கினர்.

கைது செய்யப்பட்ட மன்மோகனை மாதவரம் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்திய போலீசார் அவரை உத்தரபிரதேசம் அழைத்துச் செல்ல அனுமதி உத்தரவு பெற்றனர். முன்னதாக நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன், தனது பெயரை குருஜி என்று போடுமாறு கேட்டுக் கொண்டார். அரசு மருத்துவமனையில் மன்மோகனுக்கு பரிசோதனை நடத்தி அவரை உத்தரபிரதேசத்துக்கு அழைத்துச்சென்றனர்.

யூடியூப்பில் வீடியோ பதிவிடுவோர் சட்டத்தை மீறி பாரத பிரதமர் உள்ளிட்ட பிரபலங்களை அவதூறாக விமர்சித்தால் இந்தியாவில் எந்த ஊரில் புகார் அளித்தாலும், அந்த ஊர் காவல்துறையினர் வந்து சம்பந்தப்பட்டவரை கைது செய்து அழைத்து செல்ல முடியும் என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments