காக்கி உடையில் ஒரு தாதா.. அதிரவைக்கும் சிறுமியின் உயிர் போராட்டம்..!

0 4656

சென்னையில் துப்பாக்கி முனையில் காவல் உதவி ஆய்வாளரின் பாலியல் அத்து மீறலுக்கு உள்ளான சிறுமி கொடுத்துள்ள வாக்குமூலம் அதிரவைத்துள்ளது. சிறுமியை மிரட்ட காவல் உதவி ஆய்வாளர் ரௌடிகளை ஏவியதும் அவர்களிடமிருந்து சிறுமி சாதுர்யமாக தப்பியதும் சினிமாவை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.

சென்னை மாதவரம் துணை ஆணையரின் கீழ் பணியாற்றிய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் காவல்துறையில் உள்ள ஒரு ரவுடியை போலவே செயல்பட்டவன் என சக காவலர்களே கூறுகின்றனர். கடந்த ஆண்டு மணலியிலுள்ள ரேஷன் கடையில் கணக்காளராகப் பணியாற்றிய பெண் ஒருவருடன் சதீஷ்குமாருக்குத் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுடைய தொடர்பு அந்தப் பெண்ணின் 15 வயது மகளுக்குத் தெரியவரவே, அவர் தனது தந்தையிடம் தெரிவிக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியையும் அவரது சகோதரரையும் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என மிரட்டிய சதீஷ்குமார், நாளடைவில் சிறுமியையும் தனது பாலியல் இச்சைக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளான். அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த சிறுமியின் தாய், ஐபோன், 50 ஆயிரம் ரூபாய் பணம் என எஸ்.ஐ சதீஷ்குமார் தூக்கி வீசிய எலும்புத் துண்டுகளுக்கு மயங்கி, சதீஷ்குமாரின் ஆசைக்கு இணங்க வேண்டும் என பெற்ற மகளையே வற்புறுத்தியுள்ளார்.

சிறுமியின் பெரியம்மாவும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார். இதனால் நொந்துபோன சிறுமி, அப்போதும் மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த எஸ்.ஐ. சதீஷ்குமார், காசிமேட்டைச் சேர்ந்த சில ரௌடிகளை வரவழைத்து, உன் தந்தையை கொலை செய்துவிடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி, விஷயத்தை தனது தந்தையிடம் சொல்லாமல் மறைத்துள்ளார். ஒரு கட்டத்தில் சதீஷ்குமாருக்கும் தனது மனைவிக்கும் இடையிலான உறவைக் கண்டுபிடித்த சிறுமியின் தந்தை, தனது மகளுக்கு நேர்ந்திருக்கும் கொடுமைகள் குறித்து அறியாமலேயே இருந்துள்ளார்.

அவர் இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் எஸ்.ஐ சதீஷ்குமார், சிறுமியின் தாயார் கண்முன்னேயே அவரை விரட்டி, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் அதனை தாய் கண்டுகொள்ளாமல் இருந்ததும் சிறுமி கொடுத்த வாக்குமூலம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

இந்த நிலையில், பாலியல் கொடுமைகள் குறித்து புகார் அளிக்கலாம் என வெளியிடப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு அழைத்த சிறுமி நடந்த விவரங்களைச் சொல்லி அழுதுள்ளார். அதன் பின்னர் ஒட்டுமொத்த காவல்துறையிலும் இந்த விவகாரம் பற்றி எரியத் தொடங்கி, எஸ்.ஐ சதீஷ்குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சதீஷ்குமார், சிறுமியை கொல்ல முடிவு செய்து அவரது வீட்டுக்கு ரௌடிகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

ரவுடி கும்பலுடன் சிறுமியின் தாயாரும் அவருடைய சகோதரியும் சேர்ந்து கொண்டே அந்த வீட்டிற்கு சென்று அவரை வெளியில் வரும்படி மிரட்டியதாகக் கூறப்படும் நிலையில், இரும்பு கேட்டை உள்பக்கமாக பூட்டி கொண்டுள்ளார் சிறுமி. சாதுரியமாக அந்த நேரத்தில் தனது செல்போன் மூலமாக துணை ஆணையர் ஜெயலட்சுமிக்கு மீண்டும் வீடியோ கால் செய்து வெளியில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் இருப்பதை நேரடியாக வீடியோ காலில் காண்பித்துள்ளார் சிறுமி.

அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உதவி ஆய்வாளர் சதீஷ்குமாரையும், அந்த கும்பலையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

காக்கி உடையில் இருந்துகொண்டு எஸ்.ஐ. சதீஷ்குமார் நடத்திய ரௌடி ஆட்டமும் அவனிடமிருந்து தப்பிக்க சிறுமி நடத்திய உயிர் போராட்டமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து, உடல் மற்றும் மன ரீதியான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர் போலீசார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments