ஒரு மூட்டை பணத்தை தவறவிட்ட திடீர் கொள்ளையர்கள்..! கொள்ளையில் சொதப்புவது எப்படி ?

0 12616

மூட்டை மூட்டையாக பணம் இருப்பதாக கிடைத்த தகவலை நம்பி, சென்னையில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிற்குள் புகுந்து சிறுமியை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் அடங்கிய கொள்ளை கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை கொளத்தூர் செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் வில்லிவாக்கத்தில் சொந்தமாக ஒரு காய்கறி சந்தையை நடத்தி வருகிறார். கடந்த 19ஆம் தேதி மாலை, அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அவரது 17 வயது மகளை வாய் மற்றும் கையை கட்டிபோட்டு வீட்டில் இருந்த பணத்தை மூட்டையாக கட்டி எடுத்துச்செல்ல முயன்று தப்பி சென்றது. இது தொடர்பாக விசாரித்த காவல்துறையினர், இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த சாம்பிரகாஷ், சுனில், விஜயக்குமார், மதன், கமலக்கண்ணன், விஜய் உள்ளிட்ட 6 பேர் கும்பலை கைது செய்துள்ளனர். விசாரணையில் இந்த கொள்ளை சம்பவம் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணன், சந்தையில் உள்ள சுமார் 40 கடைகளில் இருந்து வரும் வாடகை பணம், பாத்திர கடை மூலம் வருமானம் என பணத்தை மூட்டை மூட்டையாக வீட்டில் கட்டி வைத்திருப்பதாக, அங்கு குடிநீர் கேன் போடும் மைக்கேல் என்பவன் பழ வியாபாரி நவராஜ் என்பவனிடம் கூறியுள்ளான்.

இதனை உண்மை என்று நம்பிய நவராஜா தனது அண்ணன் மகன் ஷாம் பிரகாஷிடம் கூறி கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளான். கிருஷ்ணன் பற்றி தெரிந்துகொள்ள சாம்பிரகாஷ் அவ்வப்போது அவரது மார்க்கெட்டிற்கு சென்று கண்காணித்துள்ளான் .

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை கிருஷ்ணன் தனது மகனுடன் சந்தையில் இருக்க, அவரது மனைவி அமுதாவும், மூத்த மகளும் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட வீட்டின் இரண்டாம் தளத்தில் தனியாக இருந்துள்ளனர். அப்போது போலி பதிவெண் கொண்ட எக்ஸ்யூவி ரக காரில் கூட்டாளிகளுடன் சென்ற சாம்பிரகாஷ், கிருஷ்ணனின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். வீட்டின் முதல் தளத்திலிருந்த கிருஷ்ணனின் இளைய மகளான 17 வயது சிறுமியை கத்தியைக் காட்டி மிரட்டி வாய், கை கால்களை கட்டிபோட்டு பீரோ சாவியை எடுத்து அதிலிருந்த பணத்தை சாக்குப்பையில் கட்டி எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கிருஷ்ணனின் மகன் வீட்டிற்கு வர, கொள்ளை கும்பல் சிக்கிவிடக்கூடாது என்று ஓடும் போது கொள்ளையடித்த பண மூட்டையை அங்கேயே தவற விட்டு, 50 ஆயிரம் பணத்துடன் மட்டும் காரில் ஏறி தப்பிச் சென்றது தெரியவந்தது. ஆரம்பத்தில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் சிசிடிவியில் கொள்ளை கும்பலின் அடையாளம் கிடைக்காமல், அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.

அப்போது அண்ணா நகரைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் பிரவீன் கடந்த 7ஆம் தேதி காரில் செல்லும் போது பின்னால் மற்றொரு காரில் துரத்தி வந்த கும்பல் தனது காரின் பின்னால் மோதி விபத்து நாடகம் நடத்தி தன்னை கடத்தி பணம் பறிக்க முயன்றதாக தெரிவித்தார். அவர் அளித்த காரின் எண்ணும், கிருஷ்ணனின் வீடுபுகுந்த கொள்ளையர்களின் காரின் பதிவெண்ணும் ஒன்று என்பதை போலீசார் கண்டறிந்தனர். இந்த போலி பதிவெண்ணுடன் காரில் உலாவிய கும்பல் பயன்படுத்திய செல்போன் நெட்வொர்கை வைத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இந்த கொள்ளை கும்பலை சேர்ந்த ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். இதில் சாம்பிரகாஷ், சுனில் இருவரும் ஆந்திராவில் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நவா என்கிற நவாராஜ், மைக்கேல், சுரேஷ் மற்றும் வினோத் ஆகியோரை தேடி வருகின்றனர்.

உழைக்காமல் திருடிப் பிழைக்கவும், வருந்தாமல் வாழ்க்கையில் செட்டிலாகவும், திட்டமிட்டால் ஒரு நாள் நிச்சயம் போலீஸ் உங்களை தேடி வரும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments