கடை கடையாய் மாமூல் வசூலித்த மாவுக்கட்டு மாயாவி..! கத்தி எடுத்த ரவுடி கை முறிந்த சோகம்

0 4525
கடை கடையாய் மாமூல் வசூலித்த மாவுக்கட்டு மாயாவி..! கத்தி எடுத்த ரவுடி கை முறிந்த சோகம்

சென்னை பெரம்பூரில் கையில் கத்தியுடன் கடைவீதியில் மிரட்டிப் பணம் பறித்ததோடு, ஒருவரை வெட்டி ரகளையில் ஈடுபட்ட ரவுடி ஒருவன், போலீசுக்கு பயந்து ஓடும் போது வழுக்கி விழுந்ததால் வலது கை முறிந்தது. மாமூல் ரவுடியை , மாவுக்கட்டு மாயாவியாக்கிய காவல்துறையினரின் உடனடி கவனிப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

சென்னை செம்பியத்தை சேர்ந்த அரைடவுசர் ரவுடி மகேஷ் என்பவன் தனது கூட்டாளிகளான சார்லஸ், கர்ணன், கோகுல கிருஷ்ணன் ஆகியோருடன் பெரம்பூர் ரமணா நகரில் உள்ள மளிகைக் கடை ஒன்றிற்கு சென்று மாமூல் கேட்டு மிரட்டியுள்ளான். கடைக்காரர் பயந்து போய் 200 ரூபாய் கொடுத்ததும், அங்கிருந்து சென்ற அவன், அருகில் உள்ள இறைச்சிக் கடைக்கு சென்று மாமூல் கேட்டு கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்துள்ளான்

அடுத்ததாக வெளியில் வந்தவன் ஆட்டோவில் உப்பு லோடு ஏற்றிக் கொண்டிருந்த ஓட்டுனரை கத்தியால் வெட்டியதோடு, அந்த லோடு ஆட்டோவின் கண்ணாடியையும் உடைத்து தாங்கள் இந்த ஏரியா ரவுடி என்று சத்தமிட்டு சென்றுள்ளான்

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பது போல ஏற்கனவே 200 ரூபாய் கொடுத்த மளிகை கடைக்காரரிடம் சென்று மீண்டும் 5 ஆயிரம் ரூபாய் கேட்டு கத்தியை நீட்ட, அவர் கொடுக்க மறுத்ததால், அவரை அச்சுறுத்துவதற்காக கடையில் உள்ள தக்காளி கூடையை தூக்கி விசிறிடித்து, பொருட்களை இழுத்து போட்டு உடைத்துள்ளது ரவுடிக்கும்பல்.

அக்கம்பக்கத்தினர் வந்து ரவுடி கும்பலிடம் கேட்டதும் அங்கிருந்து ஒவ்வொருவராக கம்பியை நீட்டிய ரவுடி கும்பல் , அடுத்த கடைக்கு கத்தியைக் காட்டி மிரட்டி பிச்சை எடுக்க சென்றுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இந்த ரவுடிக் கும்பலை விரட்டியுள்ளனர்

கையில் கத்தியுடன் தாவிக்குதித்து தப்பி ஓடிய ரவுடி மகேஷின் கெட்ட நேரம் வழுக்கி விழுந்ததால் அவனது வலது கை எலும்பு முறிந்து போனதாகவும், வலியால் துடித்த அவனை மீட்டு மனிதாபிமானத்தோடு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று மாவுக்கட்டு போட்டுவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரவுடிக்கு மாவுக்கட்டு போடும் அளவுக்கு உடன் இருந்து சிறப்பாக கவனித்துக் கொண்ட காவல்துறையினர். அவனது கூட்டாளிகளான கர்ணன், சார்லஸ், கோகுல கிருஷ்ணன் ஆகியோரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதே நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அட்டகாசம் செய்யும் ரவுடிகள் மீது சிறப்பான கவனிப்புடன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments