சிவாங்கி மனசுல சக்தி... இந்த கொடுமைக்கு பேரு தான் கடவுள் பக்தியா ? தோழியுடன் மனைவிக்கு டும்..! டும்..!

0 39810
சிவாங்கி மனசுல சக்தி... இந்த கொடுமைக்கு பேரு தான் கடவுள் பக்தியா ? தோழியுடன் மனைவிக்கு டும்..! டும்..!

சிவனும் சக்தியுமாக தோற்றத்தில் உள்ளதாக கூறி கணவரே, மனைவியை அவரது தோழிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த கூத்து ஈரோடு அருகே அரங்கேறியுள்ளது. தாயின் தோழியை தந்தை எனவும், தந்தையை மாமா எனவும் அழைக்கச்சொல்லி குழந்தைகளுக்கு மிளகாய் சோறு ஊட்டி சித்ரவதை செய்த கொடுமை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம், ஜவுளித்தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி ரஞ்சிதாவுக்கு இரண்டு மகன்களும், இரண்டாவது மனைவி இந்துமதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

ராமலிங்கம் தனது இரண்டு மனைவிகளுடன் ஈரோடு ரங்கம்பாளையம் ரயில் நகர் பகுதியில் வசித்து வருகின்றார். இந்நிலையில் இரண்டாவது மனைவி இந்துமதியை தேடி அவரது தோழி சசி என்கிற தனலட்சுமி அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது ராமலிங்கத்தின் மூத்த மனைவி ரஞ்சிதாவுடன் சசிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்த ராமலிங்கம், தனது முதல் மனைவி ரஞ்சிதாவை சக்தி என்றும், தோழி சசியை சிவன் போல இருப்பதாகவும் கூறி புகழ்ந்துள்ளார், ஒரு கட்டத்தில் தனது இரண்டு குழந்தைகள் கண் முன்பு ரஞ்சிதாவுக்கும், தோழி சசிக்கும் இடையே திருமணம் செய்து வைத்த கூத்தும் அரங்கேறியது.

அதோடில்லாமல் ரஞ்சிதாவை திருமணம் செய்த தோழி சசியை அப்பா என்றும், உண்மையான அப்பாவான ராமலிங்கத்தை மாமா என்று அழைக்க கோரியும் சிறுவர்களை கொடுமை படுத்தியுள்ளனர்.

கொடுமையின் உச்சமாக இரண்டு சிறுவர்களுக்கும் மிளகாய் பொடி சாப்பாடு கொடுத்து துன்புறுத்தியுள்ளனர். காரம் தாங்காமல் சிறுவர்கள் கதறிய நிலையில் குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது, உடல் முழுவதும் மிளகாய் பொடியை தேய்த்து சட்டையில்லாமல் மொட்டைமாடியில் படுக்க வைத்துள்ளனர்.

இந்த இரண்டு சிறுவர்களையே வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்ய வைத்ததுடன் வீட்டின் கழிவறையில் குழந்தைகளை படுக்க வைத்து கழிவறையை சுத்தம் செய்யும் கிருமிநாசினியை குடிக்க வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் இரண்டு சிறுவர்களும் தூங்கி இருப்பார்கள் என்று நினைத்து ராமலிங்கம், ரஞ்சிதா, தோழி சசி ஆகியோர் இரண்டு சிறுவர்களையும் நரபலி கொடுத்து கடவுளிடம் ஒப்படைத்து விட்டால் உண்மையிலேயே பெரும் சக்தி கிடைக்கும் என்று 3-பேரும் பேசிகொண்டு இருப்பதை கேட்ட சிறுவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பினர்.

முன்னதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள தாத்தா பாலசுப்பிரமணியம் வீட்டுக்கு சென்றனர். குழந்தைகள் நலக்குழுவின் அறிவுரையின் படி சிறுவர்கள் இருவரும் தனது தாத்தா பாட்டியுடன் இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே வீட்டில் நடந்த சம்பவம் குழந்தைகள் மூலமாக வெளியே தெரிவதை தடுக்க நினைத்த ரஞ்சிதா மற்றும் தோழி சசி ஆகியோர் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று கணவர் ராமலிங்கம் இறந்துவிட்டதாக கூறி பள்ளியில் இருந்து சான்றிதழை பெற்றுச்சென்றுள்ளனர்.

மேலும் இரண்டு குழந்தைகளை தங்களுடன் அனுப்பிவைக்க வேண்டும் என்று தனது தந்தையான பாலசுப்பிரமணியத்திற்கு ரஞ்சிதா தொடந்து போன் செய்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இரண்டு சிறுவர்களும் தங்களது உயிருக்கும் தங்களது தாத்தா பாட்டியின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கூறி தங்களை கொடுமை படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

சிறுவர்கள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தோழி சசி மனசில மனைவியை சக்தியாக சேர்த்துவிட்ட ராமலிங்கம் பக்தி முற்றி செய்த ராவடிகள் அனைத்தும் இரு சிறுவர்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

பக்தி என்ற பெயரில் பெற்ற மகன்களையே பலியிட பகல் வேசம் போட்ட தந்தை, தாய் மற்றும் தோழி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருவதால் இந்த சம்பவத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments