ரவுடி ராக்கப்பனின் ரகசிய கொலைகள்..! கவர்னர் மாளிகை புதர்கிணற்றில் சடலங்கள்

0 55699

சென்னையில் தனியார் மருத்துவமனையில் புகுந்து மருத்துவரை கத்தியால் வெட்டி கொள்ளையடித்த கும்பலை பிடித்து விசாரித்த போது இரண்டு பேரை கொலை செய்து சடலத்தை 40 அடி ஆழ கிணற்றுக்குள் கல்லை கட்டி இறக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை நந்தனத்தில் ஆர்எஸ்பி எனும் தனியார் மருத்துவமனைக்குள் கடந்த 13-ந் தேதி இரவு 10 மணியளவில் புகுந்த கும்பல் ஒன்று 75 வயதான மருத்துவர் ராமகிருஷ்ணன், பெண் ஊழியர் உஷா ஆகியோரை மிரட்டி, கத்தியால் தாக்கி 10 சவரன் நகை மற்றும் மருத்துவரின் ஹூன்டாய் க்ரிட்டா காரையும் பறித்துக் கொண்டு தப்பியது.

இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அடையாறு துணை ஆணையர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், சிசிடிவி கட்சிகள் மூலம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகள் என அடையாளம் கண்டு, செல்போன் சிக்னல் மூலம் சிவகங்கையில் பதுங்கியிருந்த கொள்ளை கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

கொள்ளை கும்பல் தலைவன் ஆறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ராக்கப்பன் அவனது கூட்டாளிகளான வந்தவாசி சீனிவாசன்,  உள்ளிட்ட 6 பேரையும் சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

ராக்கப்பனுடன் சேர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அண்ணாதுரை என்ற பழைய குற்றவாளி குறித்து விசாரித்தனர். மருத்துவமனையில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் கோட்டூர்புரம் அண்ணாதுரைக்கும் தொடர்பு இருக்கும் என எண்ணி தனிப்படை போலீசார் விசாரிக்க, முன்னுக்கு பின் முரணாக உளறிய ராக்கப்பன், கடந்த 9 ந்தேதி அண்ணாதுரையையும், அவன் உடன் வந்த கூட்டாளி தங்கபாண்டியையும் தீர்த்துக் கட்டிவிட்டதாக கூறி அதிரவைத்தான்.

கொல்லப்பட்ட இருவரது சடலங்களுடனும் கல்லைகட்டி, கிண்டி ஆளுநர் மாளிகை அருகில் புதர் மண்டி கிடக்கும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள பழைய கிணற்றுக்குள், இறக்கியதாக கூறியுள்ளான். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அண்ணாதுரை மற்றும் தங்கபாண்டியின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணாதுரை மீதும் இரண்டு கொலை வழக்குகள் உள்ளன.

ராக்கப்பனிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான பின்னணி தெரியவந்தது. கடந்த 2015-ம் ஆண்டில் ஆவடியில் பகுஜன்சமாஜ் கட்சி மாநில செயலாளர் முருகன் என்பவர் கவுன்சிலருக்கான தேர்தலில் வெற்றி பெற்றதால், எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஆனந்தன் என்பவர் தனது உறவினரான அண்ணாதுரையிடம் முருகனை கொலை செய்ய கூறியுள்ளார். அதன்படி அண்ணாதுரை, கூலிப்படை தலைவன் ராக்கப்பனிடம் சொல்ல கடந்த 2015 ஜூலையில் கவுன்சிலர் முருகன் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு பேசியபடி அண்ணாதுரை பணம் கொடுக்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இந்த விரோதத்தில் ராக்கப்பன் கடந்த 9-ந் தேதி தனது கூட்டாளி கருக்கா வெங்கடேசனுடன் ஆட்டோவில் சென்று சூளைமேட்டில் தங்கபாண்டி என்பவர் வீட்டில் இருந்த அண்ணாதுரையை தனது கூட்டாளி நெல்சன் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்த தனியார் இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அண்ணாதுரையுடன் ஓசி மதுவுக்கு ஆசைப்பட்டு தங்கப்பாண்டியனும் வந்துள்ளார்.

அங்கேயே அமர்ந்து பேசி மது அருந்திவிட்டு போதை ஏறிய நிலையில் அண்ணாதுரையையும், கொலையை வெளியில் சொல்லி விடுவான் என்பதால் உடன் வந்த தங்கபாண்டியையும் தீர்த்துக் கட்டியுள்ளனர். அதற்கு, சில தினங்கள் கழித்துதான் அந்த தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் கொலை தான் தீர்வு என ரவுடிகளை தேடிச்சென்றால் இறுதியில் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்தச்சம்பவமே சாட்சி..!அதே நேரத்தில் சாமர்த்தியமாக துப்பு துலக்கி இரட்டை கொலை சம்பவத்தையும் அதில் சம்பந்தப்பட்டவர்களையும் கண்டுபிடித்த காவல்துறையினர் பாராட்டுக்குறியவர்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments