தெலுங்கு நடிகர் ராம் சரணுடன் இணையும் இயக்குநர் ஷங்கர்... வெளியானது அறிவிப்பு!

இந்தியத் திரையுலகில் பிரமாண்ட திரைப்படங்கள் பலவற்றை இயக்கி வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன் என்று பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ள ஷங்கர், கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கிவந்தார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தனர். படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் கிரேன் விபத்து, கொரோனா லாக்டவுன், கமல் அறுவை சிகிச்சை என்று பல காரணங்களால் தள்ளிப்போன படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கவேயில்லை.
இதற்கிடையே, தேர்தல் நெருங்கி வருவதால், அதில் பிசி ஆகிவிட்ட கமல்ஹாசன் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகே நடிப்பைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியன் 2 - ஐ தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கும் கமலுக்கும் பிரச்னை இருப்பதால் தான் இந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிப்போகிறது என்ற கிசுகிசுப்பும் கோடம்பாக்கத்தில் உலாவுகிறது.
தள்ளிப்போன இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கையில், இயக்குநர் ஷங்கர் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் தெலுங்கு நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கவுள்ளதாக ஷங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இது குறித்து, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு, “இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஷங்கர் மற்றும் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான பொழுதுபோக்கு படமாக இது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் 2022 - ம் ஆண்டு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments