மர்ம ஆசாமியின் சித்து வேலை... உஷாரய்யா.... உஷார்....!

0 32696
மர்ம ஆசாமியின் சித்து வேலை... உஷாரய்யா.... உஷார்....!

சென்னையில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியை குறி வைத்து ஏமாற்றி கையில் அணிருந்திருந்த தங்க மோதிரங்களை திருடிச் சென்ற நூதன கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். குழந்தைக்கு ஆசீர்வாதம் வழங்க வேண்டும் எனக்கூறி மூதாட்டியை அழைத்துச் சென்று அல்வா கொடுத்த மர்ம ஆசாமியின் சித்து வேலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.  

சென்னை லாயிட்ஸ் காலணியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பிரசாத்தின் தாயார் ராவணம்மா. சனிக்கிழமை மதியம் மயிலாப்பூர் பகுதியில் நடந்து சென்ற ராவண்ம்மாவை, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஓடி வந்து வழிமறித்துள்ளான்.

அருகில் இருந்த வீட்டை காட்டி, அங்கு குழந்தைக்கான நிகழ்ச்சி ஒன்று நடப்பதாகவும், உங்களை போன்றோர் வந்து குழந்தைக்கு ஆசீர்வாதம் வழங்கினால் குழந்தையின் வாழ்க்கை செல்வ செழிப்பாக இருக்குமெனக் கூறியுள்ளான். இதனை அப்படியே நம்பிய அந்த மூதாட்டியும் அவனுடையே சென்றுள்ளார்.

மூதாட்டியை அழைத்துச் சென்ற அவன், அங்குள்ள வீட்டின் படிக்கட்டில் அமர வைத்துவிட்டு, செல்போனில் பேசுவது போன்ற பாவனையுடன் மேலே ஏறிச் சென்றுள்ளான். சிறிது நேரத்தில் திரும்பி வந்து, குழந்தையின் பெற்றோர் மிகவும் செல்வந்தர்கள் என்பதால், ஆசீர்வாதம் வழங்க வரும் முதியோர்களுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்குவதாகவும், இதற்காக கையில் அணிருந்திருக்கும் மோதிரங்களை மாடலுக்காக தரும்படியும் கூறியுள்ளான். இன்னொரு மோதிரம் கிடைக்கப்போகிறது என்ற பேராசையில், கையில் கிடந்த 3 மோதிரங்களையும் கழற்றி மர்ம ஆசாமியிடம் கொடுத்துள்ளார் அந்த மூதாட்டி. மோதிரங்களை எடுத்துக் கொண்டு மர்ம ஆசாமி தப்பிஓடி விட்ட நிலையில், இன்னொரு மோதிரத்திற்காக காத்திருந்த மூதாட்டிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெகு நேரமாகியும் மோதிரமும் வரவில்லை, அந்த ஆசாமியும் வரவில்லை...

நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்த மூதாட்டி, ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மயிலாப்பூர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து விசாரித்தில், இதே பாணியில் பல மூதாட்டிகளிடம் அந்த கொள்ளையன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, யார் என்ன சொன்னாலும் நம்பி அவர்களுடன் சென்றுவிடுவது ஆபத்து என எச்சரிக்கின்றனர் போலீசார். அடையாளம் தெரியாத நபர்கள் அணுகும் போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments