ஹவாலா பணத்துடன் கடத்தப்பட்ட கார், 6 பேர் கைது - தீவிரமாகும் விசாரணை

கோவையில் கேரளாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி கார் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் இருந்து மீட்கப்பட்ட 90 லட்ச ரூபாய் ஹவாலா பணம் குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அப்துல்சலாம், கடந்த டிசம்பர் 25-ம் தேதி பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு காரில் சென்றார்.
கோவை நவக்கரை பாலக்காடு நெடுஞ் சாலையில் இவரது காரை வழிமறித்த கொள்ளைக் கும்பல், அப்துல் சலாமை கத்தியைக் காட்டி மிரட்டி, 27 லட்ச ரூபாய் பணத்தையும் காரையும் கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பாக க.க.சாவடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். கடத்தப்பட்ட கார் மறுநாள் மாதம்பட்டி அருகே மீட்கப்பட்டது. அந்த காரின் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக சுமார் 90 லட்ச ரூபாய் ஹவலா பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தன்னிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 27 லட்ச ரூபாய் பணம் கேரளாவைச் சேர்ந்த முகமது அலி என்பவருக்கு சொந்தமானது என்றும் மற்றபடி இந்த 90 லட்ச ரூபாய் குறித்து தனக்குத் தெரியாது என்றும் அப்துல் சலாம் போலீசிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அவரிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், இடையில் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலையும் தேடி வந்தனர்.
மூன்று பிரிவுகளாக பிரிந்து தேசிய நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தும், மொபைல் போன் சிக்னல்களை ஆய்வு செய்தும் வந்த போலீசார், கடந்த 9ஆம் தேதி கோவையைச் சேர்ந்த உன்னிக்குமார் என்பவனை கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின்படி அடுத்தடுத்து, சந்தோஷ், ஸ்ரீஜித், சுபின், சந்தீப், ராதாகிருஷ்ணன் என 5 பேரை கைது செய்தனர். இவர்களில் சந்தோஷ் என்பவன் ஏற்கனவே அப்துல் சலாமுக்கு பழக்கமானவன் என்பதும், 2 மாதங்களுக்கு முன் இதே பாணியில் அவரிடம் பணம் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்தும் 6 லட்ச ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக-கேரள எல்லையில் ஹவாலா பணத்தை கொண்டு வருபவர்களை வழிமறித்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஏற்கனவே பல முறை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் அந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா என்று தமிழக போலீசார் கேரளாவில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments